Homeகுற்றவியல்சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: 19 வயது காதல் ஜோடி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை: 19 வயது காதல் ஜோடி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

செப்பாங், ஜூலை 10-

சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில், 19 வயது காதல் ஜோடியான எம். ஸ்ரீ தார்வியன் மற்றும் டி. தினேஸ்வரி ஆகிய இருவர் மீது இன்று வியாழக்கிழமை இங்குள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றங்கள் சாட்டப்பட்டன.

மாஜிஸ்ட்ரேட் கைரதுல் அனிமா ஜெலானி முன்பு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, வேலையில்லாத ஆடவரான ஸ்ரீ தார்வியன் மற்றும் அவரது காதலி தினேஸ்வரி, குற்றச்சாட்டு புரிவதாக தலையசைத்தனர்.

கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பில் இருப்பதால், அவ்விருவரிடமிருந்தும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூன் 23 ஆம் தேதி இரவு 9:11 முதல் 11:31 மணி வரை, சைபர்ஜெயாவில் உள்ள பெர்சியாரான் மல்டிமீடியாவில் அமைந்துள்ள ஆடம்பர அடுக்ககத்திலுள்ள வீடொன்றில், 20 வயது மாணவியான மனீஷாப்ரீத் கவுர் அகாராவை கொலை செய்ததாக ஸ்ரீ தார்வியன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளை, அது நிரூபணமானால், அவருக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

அதேவேளை, அக்கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, தினேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109 மற்றும் 302-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவருக்கும் அதே தண்டனைகள் பொருந்தும்.

அவ்விருவரும் வெளியே செல்வதற்கு பிணையை வழங்காத நீதிமன்றம், உடற்கூறு ஆய்வறிக்கை பரிசோதனை அறிக்கை மற்றும் இரசாயண அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக, செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

அரசு தரப்பில், துணை அரசு வழக்கறிஞர் ராஜா ஜைஸுல் ஃபரிடா ராஜா ஜஹாருதீன் பிரதிநிதித்த வேளை, ஸ்ரீ தார்வியனை வழக்கறிஞர் எம். மனோகரனும் தினேஸ்வரியை வழக்கறிஞர் டத்தோ அபு பகார் இசா ராமத்தும் பிரதிநிதித்தனர்.

பிசியோதெரபி துறையில் இளங்கலை கல்வி பயின்று வந்த சரவாக்கைச் சேர்ந்த மனீஷாப்ரீத் கவுர் எனும் மாணவி கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை 10 மணியளவில் சைபர்ஜெயாவில் உள்ள வீடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவ்விருவர் மீது குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன.

 

spot_img

latest articles

explore more