ஈப்போ, ஜூலை 10-
வட கிந்தா மாவட்ட அளவிலான 25 ஆம் ஆண்டு வளர் தமிழ் விழா ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
வடகிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழக ஏற்பாட்டிலான இப்போட்டியில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி முதல் நிலையில் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக, செட்டியார் தமிழ்ப்பள்ளியும் மூன்றாவது நிலையில் சென். பிலோமினா தமிழ்ப்பள்ளியும் வாகை சூடியது.
இப்போட்டியை வர்த்தக பிரமுகர் ஆறுமுகம் கணேசன் தொடக்கி வைத்ததோடு நிகழ்ச்சிக்கு ஆதரவாக 3 ஆயிரம் வெள்ளி நிதி உதவியையும் வழங்கினார்.
இப்போட்டியில் திருக்குறள் மனனப்போட்டி , கவிதை ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப்போட்டி ஆகியவை இடம் பெற்றன . இதில் வட கிந்தா மாவட்டத்தில் உள்ள 14 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து 390 மாணவர்கள் பங்கேற்றனர் என்று பேரா மாநில தலைமையாசிரியர் கழகத் தலைவரும் கிந்தா மாவட்ட தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவருமான ச. ஜெயகுமார் தெரிவித்தார் .
அதே வேளையில், மாநில அளவிளான வளர்தமிழ் விழா இம்மாதம் 26 ஆம் தேதி பத்துகாஜா, செங்காட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மலாக்காவில் நடைபெறும் தேசிய நிலையிலான போட்டியில் பேரா மாநிலத்தைப் பிரதிநிதித்து மாணவர்கள் பங்கேற்பர் என்றார்.


