Homeசமூகம்பணி ஓய்வு, ஆசிரியர் பணிக்கே. தமக்கு அல்ல; தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கான தமது சேவைகள் தொடரும்! -எஸ்.எஸ்.பாண்டியன்...

பணி ஓய்வு, ஆசிரியர் பணிக்கே. தமக்கு அல்ல; தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கான தமது சேவைகள் தொடரும்! -எஸ்.எஸ்.பாண்டியன் சூளுரை

கோலசிலாங்கூர், ஜூலை 11-

பணி ஓய்வு, தாம் செய்துவந்த ஆசிரியர் பணிக்கே தவிர, தமக்கு அல்ல. தமிழ்ப்பள்ளி ஆதரவாளராக, அதன் மேம்பாட்டிற்கு தம்மால் முடிந்த சேவையை வழங்க போவதாக, தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவரும் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியருமான எஸ்.எஸ்.பாண்டியன் சூளுரைத்தார்.

நேற்று கோலசிலாங்கூரிலுள்ள டீ பால்மா தங்கும்விடுதியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில் பேசிய பாண்டியன் அதனைத் தெரிவித்தார்.

 

சிலாங்கூர் ம.இ.கா.வின் கல்வி பொறுப்பாளராக தாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இனி மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரில் சென்று, அவற்றின் குறைநிறைகளைக் கண்டறிந்து முடிந்தவரையிலான சேவைகளை வழங்க போவதாகவும் பாண்டியன் உறுதியளித்தார்.

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வைப் பெற்றுள்ள அவர், தம் வாழ்க்கையில், தமக்கு பக்கபலமாக இருந்த நபர்களுக்கு நன்றி பாராட்டினார். குறிப்பாக, தம்மை ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்த முன்னாள் தலைமையாசிரியர் ஏபல், பார்த்திபன், ம.இ.கா. தஞ்சோங் காராங் தொகுதி முன்னாள் தலைவர் டத்தோ என்.எஸ்.கிருஷ்ணன், ம.இ.கா.விற்கு அழைத்துவந்த முன்னாள் ஆசிரியர் டத்தோ திருமூர்த்தி, ஆசிரியர்களான குணநாதன், ராஜேந்திரன், சாந்தினி, செல்வேந்திரன் என பல்வேறு நபர்களுக்கு பாண்டியன் நன்றி பகின்றார்.

 

கம்போங் பாரு தோட்டத்தின் மைந்தனான பாண்டியன் 1987ஆம் ஆண்டு அங்குள்ள தமிழ்ப்பள்ளியில் இடைக்கால ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார். கல்வித்துறையில் பயிற்சி முடித்த பாண்டியன் அவர் நிரந்தர ஆசிரியராக, 1994ஆம் ஆண்டு தொடங்கி 2008ஆம் ஆண்டு வரையில், கம்போங் பாரு தமிழ்ப்பள்ளியிலேயே பணியாற்றினார்.

2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையில் சுங்கை திங்கி தமிழ்ப்பள்ளியில் புறப்பாட முதுநிலை உதவி ஆசிரியராக செயல்பட்ட அவர், 2011ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரையில் ராஜா மூசா தமிழ்ப்பள்ளியிலும் 2022ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையில் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியிலும் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

ஆசிரியர் பணியில் அருஞ்சேவையை வழங்கியதன் அங்கீகாரமாக, 2007, 2018 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருதும் 2024ஆம் ஆண்டில் அரசாங்க பணியாளர்களுக்கான PPT விருதும் வழங்கி பாண்டியன் கௌரவிக்கப்பட்டார்.

இதனிடையே, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி குறித்து நினைவுக்கூர்ந்த அவர், அப்பள்ளியில் உள்கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மாணவர் அமைப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய பாண்டியன், அவர்களிடையிலான கூட்டு ஒத்துழைப்பின் கீழ், அப்பள்ளி அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி பயணிக்கும் என நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நேற்றைய நிகழ்வில், சிலாங்கூர் பாலர் மற்றும் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் தமிழரசு, கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் பெண்ணரசி தனபால் உள்பட ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

spot_img

latest articles

explore more