Homeசமூகம்பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் உருமாற்றத்திற்கு வித்திட்டவர், எஸ்.எஸ்.பாண்டியன்! - பூபாலன் புகழாரம்

பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் உருமாற்றத்திற்கு வித்திட்டவர், எஸ்.எஸ்.பாண்டியன்! – பூபாலன் புகழாரம்

கோலசிலாங்கூர், ஜூலை 10-

சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்கு குறுகிய காலத்திலேயே பல்வேறு பங்களிப்பை, பணி ஓய்வு பெற்றுள்ள அதன் முன்னாள் தலைமையாசிரியரும் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவருமான எஸ்.எஸ்.பாண்டியன் வழங்கியுள்ளார்.

 

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பணி ஓய்வு பெறும் வரையில், கல்வித் தேர்ச்சியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த விளங்க, அவர் பல்வேறு செயல்திட்டங்களை அமல்படுத்தியிருந்ததாக, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் பூபாலன் ரெங்கசாமி புகழ்ந்துரைத்தார்.

பூபாலன் ரெங்கசாமி

குறிப்பாக, மாணவர்களுக்கு கல்விக்கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்த, பாண்டியன் முயற்சியில், பள்ளி மண்டபத்தில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன. அதுதவிர, கொள்கலனிலான வாசிப்பு மையத்தை ஏற்படுத்தியது, பள்ளி சுவர்களை கண்கவர் படங்களால் அலங்கரித்தது, பள்ளியின் கட்டமைப்பை மாற்றியது முதலானவற்றைக் கூறிக்கொண்டே போகலாம்.

விளையாட்டுத் துறையில் குறிப்பாக, மலேசிய இந்தியர் காற்பந்து சங்கம் – மீஃபா தலைமையிலான காற்பந்து போட்டிகளில், ஆண், பெண் பிரிவுகளில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 3 முறை சுழற்கிண்ணங்களை வென்றுள்ளனர். அவையனைத்தும், மாணவர்களின் உடல் உத்வேகத்திற்கும் துணைப்புரிந்துள்ளது.

இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களிடையே உறவுப்பாலத்தை ஏற்படுத்தி, பள்ளிக்கு அதனால் நன்மைகளை கொண்டுவருவதற்கு, தமது தலைமையிலான அமைப்பை உருவாக்கவும் பாண்டியன் துணைப்புரிந்துள்ளார்.

இவ்வாண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. தேசிய சங்கப் பதிவகத்திலும் பதிவுப்பெற்ற அமைப்பாக விளங்குகின்றது. அவ்வமைப்பின் நிதிவளத்தை வலுப்படுத்துவதிலும் முன்னாள் மாணவர்களை அமைப்பில் சேர்ப்பதிலும் தற்போது கவனம் செலுத்தப்படுவதாக கூறிய பூபாலன், பணி ஓய்வுக்கு பின்னரும் பாண்டியன் அவர்களின் ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைக்கும் என்றார்.

முன்னதாக, பாண்டியன் அவர்களின் பணி நிறைவு விழா இன்று கோலசிலாங்கூரிலுள்ள டீ பால்மா தங்கும்விடுதியில் நடைபெற்றது. அதில், கலந்துக்கொண்டு பூபாலன் உரையாற்றினார்.

அந்நிகழ்வில், சிலாங்கூர் பாலர் மற்றும் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் தமிழரசு, கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்ற தலைவர் பெண்ணரசி தனபால் உள்பட ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் முதலானோர் கலந்துக்கொண்டனர்.

spot_img

latest articles

explore more