ஷா ஆலம், ஜூலை 22-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், நாடாளுமன்றத்தில் தமக்கெதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்பட ஜனநாயக நடைமுறைகள் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது, இந்த நம்பிக்கைக்கு காரணம், எதிர்க்கட்சி கூட்டணியான பெரிக்காத்தான் நேஷ்னல், இத்தகைய நடவடிக்கையை எடுக்க தைரியம் இல்லை என்பதை நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் நன்கு அறிந்திருப்பதாகும் என டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் சின் கூறினார்.
டத்தோ ஸ்ரீ அன்வாரின் நம்பிக்கைக்கு நான்கு முக்கிய காரணிகள் உள்ளன. இவை நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியை முறையாக சவால் செய்ய முடியாமல் பெரிக்காத்தான் நேஷ்னலை தடுப்பதாக, பேராசிரியர் ஜேம்ஸ் சின் தெளிவுபடுத்தினார்.
“முதலாவதாக, பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிபெறச் செய்ய போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தற்போது, அரசாங்க கூட்டணியிடம் சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இரண்டாவதாக, பெரிக்காத்தான் நேஷ்னலுக்கு அவர்களின் உண்மையான ஆதரவு வலிமை குறித்து தெளிவு இல்லை. அவர்கள் முயற்சித்தால், அது அவர்களுக்கே ஆபத்தாய் போய் முடியலாம், ஏனெனில் அவர்களின் உண்மையான ஆதரவு அனைவருக்கும் தெரியவரும்.
மூன்றாவதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு முன்வைக்கப்பட்டால், டத்தோ ஸ்ரீ அன்வார் கிட்டத்தட்ட நிச்சயமாக வெற்றிபெறுவார், இது, வரும் பொதுத் தேர்தல் வரை, பெரிக்காத்தான் நேஷ்னல் கூட்டணியினர், இந்த முயற்சியை மீண்டும் மேற்கொள்வதை கடினமாக்கும்.
நான்காவதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவது டத்தோ ஸ்ரீ அன்வாரின் அரசியல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும், இதனால் எதிர்க்கட்சிகள் அவரது தலைமையை மக்கள் மத்தியில் பலவீனப்படுத்துவது கடினமாக இருக்கும்,” என்று பேராசிரியர் ஜேம்ஸ் சின் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அம்னோ, பாக்காத்தான் ஹராப்பான், சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு – GPS ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணி உறுதியாக இருக்கும் வரை, டத்தோ ஸ்ரீ அன்வார் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்ற பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று பேராசிரியர் ஜேம்ஸ் சின் கருத்து தெரிவித்தார்.


