மியாமி, ஜூலை 25-

1980-களில் மல்யுத்த உலகின் பிரகாசமான நட்சத்திரமாக விளங்கிய ஹல்க் ஹோகன், தனது 71ஆவது வயதில் அமெரிக்கா, புளோரிடாவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார் என்று அமெரிக்க ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.

ஹல்க் ஹோகன்னின், உண்மையான பெயர் டெர்ரி போலியா. 6 அடி 7 அங்குல உயரம், தனித்துவமான மஞ்சள் நிற தாடி மற்றும் தலைக்கு கட்டப்பட்ட பந்தனா ஆகியவற்றால் உலகளவில் அறியப்பட்டவர்.

அவரது கவர்ச்சிகரமான ஆளுமை மற்றும் மல்யுத்தத் திறமை, மல்யுத்தத்தை மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்ட குடும்ப பொழுதுபோக்காக மாற்றியது.

1979ஆம் ஆண்டு உலக மல்யுத்த கூட்டமைப்பில் (WWF, தற்போது WWE) தனது பயணத்தைத் தொடங்கிய ஹோகன், 1980களில் ஆண்ட்ரே தி ஜெயண்ட் மற்றும் “ரவுடி” ரோடி பைப்பர் போன்ற மல்யுத்த வீரர்களுடன் இணைந்து, மல்யுத்த உலகை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

அவரது “ஹல்கமேனியா” பிராண்ட், மல்யுத்தத்தை தாண்டி, “ராக்கி III,” “நோ ஹோல்ட்ஸ் பார்ட்” மற்றும் “பேவாட்ச்” போன்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து, திரையுலகிலும் புகழ் பெற்றது.

2005ஆம் ஆண்டு WWE ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற ஹோகன், “பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணப்பட்ட நபர்களில் ஒருவராக மல்யுத்த உலகை உலகளாவிய அளவில் பிரபலப்படுத்தினார்” என்று WWE சமூக ஊடகத்தில் தெரிவித்தது.

சமீப ஆண்டுகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த ஹோகன், 2024 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தோன்றி, டிரம்பை ஆதரித்து உரையாற்றினார்.

மல்யுத்த வாழ்க்கையில் பல ஆண்டுகள் உடலுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக, பிற்காலத்தில் அவர் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டார்.

ஹோகனின் மறைவைத் தொடர்ந்து, WWE நிர்வாகத்தினர், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டுள்ளனர்.

ஹோகன் மூன்று முறை திருமணம் செய்தவர், முதல் மனைவி லிண்டாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.