கோலாலம்பூர், ஜூலை 24-
சர்ச்சைக்குரிய மதபோதகர்கள் ஜம்ரி வினோத், ஃபிர்டாவ்ய்ஸ் வோங் ஆகியோருக்கு எதிராக “போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று சட்டத்துறை அலுவலகம் (ஏஜிசி) கூறியதாக சட்டம் மற்றும் கழக சீர்திருத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் கூறியுள்ளதற்கு இந்தியர் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவு நீதி மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்ற கோட்பாட்டிற்கு பெரும் சவால் விடுப்பதாக கூறிய அவர்கள், சட்டத்துறை அலுவலகத்தின் காரணத்தை முற்றிலும் நிராகரித்துள்ளனர்.
அவ்விருவர் மீது பல போலீஸ் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அது தவிர, வீடியோக்கள், பொது அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் உள்ளிட்ட தெளிவான ஆதாரங்கள் பரவலாகக் கிடக்கின்றன.
இந்த ஆதாரங்கள் சமூகத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இன மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவமதிப்பு மற்றும் தூண்டுதல் உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சில தனிநபர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் போது வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, நாட்டின் நீதி முறைமையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது,” என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் செயல்படுத்தப்படுவது ஏற்கத்தக்கது அல்ல என்று வலியுறுத்திய அவர்கள், இனம் அல்லது மதத்திற்கு எதிரான எந்தவொரு அவமதிப்பு, வெறுப்பு அல்லது தூண்டுதலும், புரிந்தவர் யாராக இருந்தாலும், கடுமையாகவும் நியாயமாகவும் கையாளப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
சட்டத்துறை அலுவலகம், இந்த முடிவை மறு பரிசீலணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது நாட்டின் நீதி முறைமை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
“மலேசிய மக்கள், குறிப்பாக இந்திய சமூகத்துடன் இணைந்து, நீதி, மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் முதலானோர் உறுதியளித்தனர்.