கோலாலம்பூர், ஜூலை 26-

வரும் ஆகஸ்டு 2 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணும் அச்சமில்லை அச்சமில்லை எனும் சிந்தனையைத் தூண்டும் உள்ளூர் தமிழ் விவாத நிகழ்ச்சியை அனைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கலாம்.

திருமணம், குழந்தைகள் மேம்பாடு, தொழில்நுட்பத்தின் தாக்கம், சமூக ஊடக உத்வேகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த மற்றும் நிஜ வாழ்க்கைத் தலைப்புகளை ஆராய்வதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விமர்சனச் சிந்தனையை ஊக்குவித்தல் மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்த விவாத நிகழ்ச்சி, நிச்சயமாக அனைத்து தரப்பு மலேசியர்களையும் கவரும்.

பிரபல இந்திய நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் கொடையாளர் கௌதமியால் தொகுத்து வழங்கப்படும் அச்சமில்லை அச்சமில்லை, பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட இரண்டு விவாதக் குழுக்களைத் தாங்கி மலரும்.

மேலும், தங்கள் துறையில் புலமைப் பெற்ற நிபுணர்கள், உண்மையான தகவல்கள்  மற்றும் கருத்துகளை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வர்.

லெவிஸ்டா முதன்மை ஆதரவாளராகவும் தாமரை ஜூவல்ஸ், ராஜி சில்க் பேலஸ், ஜோதி இம்பெக்ஸ் மற்றும் பல நிறுவனங்கள் இணை ஆதரவாளராகவும் இணைந்து அச்சமில்லை அச்சமில்லை விவாத நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.