பெட்டாலிங் ஜெயா, ஆக. 7-
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சுக்மா விளையாட்டு போட்டியிலிருந்து சிலம்பம் நீக்கப்பட்டது குறித்து சுக்மா உச்சமன்றக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி ஷண்முகம் விளக்கமளிக்க வேண்டும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷாகரன்் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுக்மா உச்சமன்றக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியக் குரலாக இருக்கும் மலாக்கா மாநில இளைஞர் விளையாட்டு மற்றும் பண்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினருமான வி.பி ஷண்முகத்திடம் சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டைப் பாதுகாப்பதற்கான பொறுப்பு உள்ளதை ராஜீவ் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், சிலம்ப விளையாட்டை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்ட சுக்மா உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பதையும் வி.பி ஷண்முகம் தெரிவிக்க வேண்டும்.
அக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பாரேயானால் சிலம்பம் நீக்கப்பட்டதற்கான காரணம், எந்த அடிப்படையில் அவ்விளையாட்டு நீக்கப்பட்டது, அதற்கு வாக்களிப்பு நடத்தப்பட்டதா, இதில் அவர் வாக்களித்தாரா ஆகியவை குறித்து வி.பி ஷண்முகம் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராஜீவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருவேளை அவர் அக்கூட்டத்தில் பங்கெடுக்க தவறியிருந்தால்,அது பொறுப்பற்ற செயலாகவும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக அவர் செய்தது மன்னிக்க முடியாத துரோகமாகவும் கருதப்படும் என்றும் ராஜீவ் சாடினார்.
சுக்மா 2026இல் சிலம்பம் இடம்பெறாதது சிறுபான்மை சமூகத்தின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதற்கான தெளிவான உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகையால், சுக்மா உச்சமன்றக் குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியப் பிரதிநிதியான வி.பி ஷண்முகம் இது குறித்து உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என்று ராஜீவ் வலியுறுத்தியுள்ளார்.
-அஸ்வினி செந்தாமரை

