சுங்கைப்பட்டாணி, நவ.5-
கெடா மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் சுங்கைப்பட்டாணி சுவர்ணபூமி மண்டபத்தில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ ஹஜி சனூசி தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார்.

விழாவில் 18 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், வாரிய குழு உறுப்பினர்கள், 5 நல்வாழ்வு இல்லங்களைச் சார்ந்தவர்கள், மற்றும் 20க்கும் மேற்பட்ட இந்திய சமூக அமைப்புகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாநில அரசின் ஆதரவுடன், தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் RM100,000 நிதியும், மேலும் நல்வாழ்வு இல்லங்களுக்கு RM5,000 நிதியும் வழங்கப்பட்டது.

அதனுடன், தீபாவளியை முன்னிட்டு 1,200 தீபாவளி உணவுக்கூடைகள் மாநிலம் முழுவதும் சேவை மையங்கள் மற்றும் சமூக அமைப்புகள் வழியாக வழங்கப்பட்டன. இவை மந்திரி பெசாரின் RM120,000 மதிப்பிலான சிறப்பு நிதி மூலம் வழங்கப்பட்டவையாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனூசியின் தலைமையில், தீபாவளி உணவுக்கூடை விநியோகம் மற்றும் மாநில அளவிலான கொண்டாட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“கெடா மாநிலத்தில் எந்த இனத்தினருக்கும் பாகுபாடு இல்லை. அனைத்து சமூகங்களும் மாநில முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன,” என்று டத்தோ ஸ்ரீ சனூசி தனது உரையில் வலியுறுத்தினார்.


