சிகாமாட்:

கல்வியே மனிதவள வளர்ச்சிக்கான முதன்மை அடித்தளமாக இருப்பதை மடானி அரசு தொடர்ந்து வலியுறுத்துவதாகச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

கல்வி அறிவு ஒழுக்கத்தையும் போட்டித்திறனையும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் என்று சிகாமாட்டிலுள்ள பூலோ காசாப் இடைநிலைப்பள்ளியின் எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய யுனேஸ்வரன் கூறினார்.

மேலும், அவர் தனது உரையில், “மாணவர்களின் வெற்றியை வெறும் தேர்வு முடிவுகள் மூலம் அளவிட முடியாது. ஒழுக்கம், முயற்சி மற்றும் உத்வேகம் ஆகியவையும் அதற்குத் துணை நிற்கும் முக்கிய கூறுகள் என்று குறிப்பிட்டார்.

எஸ்பிஎம் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு யுனேஸ்வரன் 4,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவ்வாண்டு 128 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.

அவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இம்முறை எஸ்பிஎம் தேர்வை எழுதும் பூலோ காசாப் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் சிறந்த தேர்ச்சி பெற்று தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்குப் பெருமை சேர்க்க தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.