பெட்டாலிங் ஜெயா, ஜூலை 19-
சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி பிரதமரின் மீதான நிதி மோசடி குறித்த விவரங்களைப் பொதுமக்களிடம் வெளியிட வேண்டுமென ஜசெக வின் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார். அபாண்டி அலி தாம் சம்பந்தப்பட்டுள்ள வழக்கில் சுயமாக முடிவெடுக்க முடியாது என்ற சாதாரண நெறியைக் கூட கடைப்பிடிக்க வேண்டுமென்று அறியாதிருக்கிறார்.
பிரதமரின் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவரின் மீது எந்தவொரு குற்றமும் இல்லையெனக் கூறி அவரை விடுவித்தது எந்த ஆதாரத்தைக் கொண்டு என கோபிந்த் சிங் கேள்வி எழுப்பினர். பிரதமரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்குத் தகுந்த ஆதாரம் இருந்தால் அதனை பொதுமக்களுக்கு அவர் வெளியிடுவதோடு அதனை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். அபாண்டி தைரியமானவர் என்றால் தமது முடிவுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.
நேற்று முன்தினம் ஷா ஆலமில் நடந்த பரப்புரை ஒன்றில் பேசிய துன் மகாதீர், 1எம்டிபி நிதி முறைகேட்டுக்கும் பிரதமருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது பற்றி விசாரித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், பேங்க் நெகாரா மற்றும் தேசிய தணிக்கையாளர் ஆகியோரின் அறிக்கைகள் அதிகாரத்துவ ரகசிய ஆவணங்களாக(ஓஎஸ்ஏ) அறிவிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஓஎஸ்ஏ சட்டம் குற்றச் செயல்களை மறைக்கப் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். இதில் சட்டத் துறைத் தலைவர் ரகசியத்தை முடி மறைப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு அபாண்டி அலி, தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் அதில் மூடி மறைக்க எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.


