சுங்கை சிப்புட்:
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை ம.இ.கா. மீண்டும் கைப்பற்றுவதற்கான இலக்கை சாத்தியமாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
சமீபத்தில் சுங்கை சிப்புட்டில் உள்ள போங்மூன் உணவகத்தில் நடைபெற்ற சந்திப்பில் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக்கொண்டது, ம.இ.காவின் போராட்டத்திலும் எழுச்சியிலும் இளைஞர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அது காண்பிப்பதாக பேராக் ம.இ.கா. இளைஞர் பிரிவு தலைவர் தியாகேஷ் கணேசன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காட்டிய உற்சாகமும், கட்சியின் மீதான உறுதிப்பாடும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்த தியாகேஷ், இது ம.இ.கா மீது இளைஞர்கள் வைத்துள்ள நம்பிக்கையைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது என்றார்.
மேலும், நாட்டின் தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து இளைஞர்களிடையே விரிவாகப் பேசிய அவர், இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பாதையில் கொண்டுச் செல்வதில் ம.இ.கா இளைஞர் பிரிவின் பங்கு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
குறிப்பாக, ம.இ.காவின் கோட்டையான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் தங்களது வசமாக்குவதே கட்சியின் முதன்மை இலக்கு என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அதேவேளையில், கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி கருதி ம.இ.கா தலைமைத்துவம் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் பேராக் மாநில இளைஞர் பிரிவு தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் இந்த மேடையில் வலியுறுத்தினார்.
இந்தச் சிறப்பான சந்திப்பு நிகழ்ச்சியில் சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.கா தலைவர் சின்னராஜு மற்றும் தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

