குருக்களை இழிவுபடுத்திய நபர் மீது போலீசில் புகார்!

0
6

பத்து ஆராங், ஜூலை 19-

வாட் சாப் சமூக வலைத்தளத்தில் கிள்ளானைச் சேர்ந்த சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களைப் பற்றி இழிவாகப் பேசி குரல் பதிவை வெளியிட்ட நபருக்கு எதிராக ரவாங், பத்து ஆராங்கைச் சேர்ந்த இளைஞர்கள் பத்து ஆராங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து புகார் அளித்தவர்களில் ஒருவரான கேசவன் சுப்ரமணியம் (வயது 31) கூறுகையில், சிவாச்சாரியார் எஸ்.கோபால் குருக்களுக்கு எதிராக குரல் பதிவை வெளியிட்ட நபரும் ஒரு குருக்கள் என தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குரல் பதிவில் அந்த நபர் கோபால் குருக்களை இழிவுபடுத்தியதோடு இந்து சமயத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
உடல் பேறு குறைந்தவர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என இந்து சமயம் கூறவில்லை. ஒரு குருக்களாக இருந்து கொண்டு இத்தகைய விஷமத்தனமான கருத்தை அவர் கூறியிருப்பது இந்நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்து சமயத்தின் மீது தவறான எண்ணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிரித்தியங்கரா தேவி வழிபாடு குறித்து ஒரு தகவலை கோபால் குருக்கள் வாட்சாப்பில் ஒரு குழுவில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தில் சம்பந்தப்பட்ட குருக்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதனை நாகரிகமாக கூறியிருக்கலாம். ஆனால், அதை விடுத்து கோபால் குருக்களின் உடலை பற்றி இழிவுபடுத்தி பேசியிருக்கக்கூடாது. இது மனித பண்புக்கு முரணானது.
தற்போது சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலாகியுள்ள இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள நபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுமார் 4 போலீஸ் புகார்களை செய்துள்ளோம் என கேசவன் குறிப்பிட்டார்.