பாரீஸ், ஜூலை 19

பார்சிலோனா அணியின் முன்னணி கோல் மன்னனான பிரேசில் அணியின் நெய்மாரைப் பெறுவதற்கு பிரான்ஸின் பிஎஸ்ஜி அணி தயாராகிவிட்டது. அவரை பெறுவதற்கு 195 மில்லியன் பவுன் தொகையை வழங்கவும் பிஎஸ்ஜி முன்வந்துள்ளது கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக பார்சிலோனா அணியிலிருந்து விலகி, பிஎஸ்ஜியில் இணைவதற்கு நெய்மாரும் இணக்கம் தெரிவித்திருப்பதாக டெய்லி மெயில் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  கடந்த பருவத்தின் ஜுவன்டெஸ் அணியிலிருந்து பௌல் பொக்பாவை பெறுவதற்கு மன்செஸ்டர் யுனைடெட் 89 மில்லியன் பவுன் தொகையை செலுத்தியது.

இதுவரையில் உலகின் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்டக்காரராக பொக்பா விளங்குகின்றார். ஆனால் தற்போது பிஎஸ்ஜி அணி 195 மில்லியன் பவுன் தொகையை கொடுக்க முன்வைத்திருப்பதால் இங்கிலாந்து கால்பந்து அணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

குறிப்பாக மன்செஸ்டர் யுனைடெட் அணியும். செல்சீ அணியும் நெய்மாரை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டன. தற்போது நெய்மாரை பெறுவதற்கு 195 மில்லியன் பவுன் தொகையை வழங்க பிஎஸ்ஜி முன்வைத்திருப்பதால், இந்த 2 அணிகளும் அவரை பெறும் முயற்சியை கைவிட்டுள்ளன.  இருப்பினும் நெய்மாரை விற்பதற்கு பார்சிலோனா தயாராக இல்லை என அவ்வணி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.