பெட்டாலிங் ஜெயா:
2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திரா காந்தி வழக்கின் கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பு, அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சிறார்களின் ஒருதலைப்பட்ச இஸ்லாம் மதமாற்றங்களுக்கு பொருந்தாது என்று மலாக்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ஆம் ஆண்டு தன்னுடைய 11 வயதில் தாயின் மூலம் இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட 28 வயது பெண் ஒருவர், தனது மதமாற்றத்தை ரத்து செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர், தந்தையின் அனுமதி இல்லாமல் தன்னை மதமாற்றம் செய்ததாகவும், இந்து சூழலில் வளர்ந்ததால் இஸ்லாமை உணர்ந்து ஏற்கவில்லை என்றும் வாதிட்டார்.
ஆனால் நீதித்துறை ஆணையர் எஸ். ராஜா சேகரன், இந்திரா காந்தி தீர்ப்பு “எதிர்காலத்திற்கு மட்டுமே” பொருந்தும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார்.
அதனால், 2018க்கு முன்பு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட மதமாற்றங்கள் தானாகவே செல்லாததாக மாறாது என்றார்.
மேலும், மலாக்கா இஸ்லாமிய நிர்வாகச் சட்டத்தின் கீழ் அந்த பெண்ணின் மதமாற்றம் சட்டரீதியாக செல்லுபடியாக இருந்ததாக நீதிமன்றம் கண்டறிந்தது. தன்னை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக கூறிய குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரம் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
“இஸ்லாமை பின்பற்றுவது” மற்றும் “இஸ்லாமை கடைப்பிடிப்பது” என்பது அரசியலமைப்பு ரீதியாக வேறுபட்டவை என்றும், ஒருவர் இந்து வழிபாடுகளில் ஈடுபட்டதால் மட்டும் அவர் இஸ்லாமியர் அல்ல என்று சொல்ல முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
இதனால், அந்த பெண்ணின் மத மற்றும் பெயர் விவரங்களை அதிகாரப்பூர்வ பதிவுகளில் மாற்றுமாறு கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனினும், இது அரசியலமைப்பு மற்றும் அடையாள உரிமைகள் தொடர்பான முக்கிய வழக்கு என்பதால், மனுதாரருக்கு எதிராக நீதிமன்றச் செலவு விதிக்கப்படவில்லை.

