புத்ராஜெயா:

காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் பண்டிபுக்யோ வகை எபோலா வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசிய சுகாதார அமைச்சு (KKM) நாட்டின் தயார் நிலையும் கண்காணிப்பும் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவரை மலேசியாவில் எபோலா தொற்று பதிவு செய்யப்படவில்லை என்றாலும், வெளிநாட்டு பயணங்களின் மூலம் நோய் நாட்டுக்குள் நுழையும் அபாயத்தை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக உகாண்டா மற்றும் காங்கோவில் இருந்து மலேசியா வரும் பயணிகள், துபாய், தோஹா மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச இடைநிலையங்கள் வழியாக வந்தாலும் கண்காணிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது. தற்போது அந்த நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு நேரடி விமான சேவை இல்லை என்றும் கூறப்பட்டது.

பொதுச் சுகாதார அபாய மதிப்பீடு மற்றும் ஆரம்ப தடுப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நுழைவாயில்களிலும் கண்காணிப்பும் சோதனைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மே 16 வரை காங்கோவின் இதுரி மாகாணத்தில் எட்டு ஆய்வக உறுதி செய்யப்பட்ட எபோலா நோயாளிகள் மற்றும் 246 சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 80 சந்தேக மரணங்களும் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, உகாண்டாவின் கம்பாலாவில் காங்கோ பயண வரலாற்றுடைய ஒருவரைச் சேர்ந்த இரண்டு உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எபோலா என்பது உயிருக்கு ஆபத்தான கடுமையான தொற்றுநோயாகும். பாதிக்கப்பட்ட மனிதர் அல்லது விலங்குகளின் இரத்தம் மற்றும் உடல் திரவங்களின் மூலம் நெருங்கிய தொடர்பில் இந்த நோய் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, தசை வலி, கடும் சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சிலருக்கு இரத்தப்போக்கு போன்றவை நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

நாட்டின் தயார் நிலையை வலுப்படுத்துவதற்காக அனைத்து சுகாதார நிலையங்களிலும் சந்தேக நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) போதுமான அளவில் இருப்பதும், சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IMR) மற்றும் தேசிய பொது சுகாதார ஆய்வகத்துடன் (MKAK) இணைந்து ஆய்வக பரிசோதனை திறனும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு முகமை (AKPS), விமான நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உகாண்டா அல்லது காங்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பியவர்கள், 21 நாட்களுக்குள் காய்ச்சல், உடல்வலி, வாந்தி அல்லது இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.