Homeஅரசியல்நெகிரி செம்பிலானுக்கு ரிம30 பில்லியன் முதலீடு; 50,000 வேலைவாய்ப்புகள் - தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை...

நெகிரி செம்பிலானுக்கு ரிம30 பில்லியன் முதலீடு; 50,000 வேலைவாய்ப்புகள் – தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை வெளியீடு

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிம30 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேசிய முன்னணி (BN) தனது மாநிலத் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.

சிரம்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய முன்னணியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 88 வாக்குறுதிகள் அடங்கிய இந்த அறிக்கை, ஒன்பது முக்கிய பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தை முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக மாற்றுவது, தற்போதுள்ள தொழில்துறை பகுதிகளை மேம்படுத்தி புதுப்பிப்பது, மாநிலத்தின் ஹலால் தொழில் மையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது மற்றும் ட்ரை போர்ட் (Dry Port) வசதியை உருவாக்குவது ஆகியவை முக்கிய பொருளாதார வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன.

மேலும், “ஒரு மாவட்டம் – ஒரு முக்கிய நிறுவனம்” என்ற புதிய கொள்கையின் மூலம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பெரிய நிறுவனத்தை ஈர்த்து, சிறிய நகரங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளது.

மலேசியா விஷன் வேலி (Malaysia Vision Valley) வளர்ச்சிப் பகுதியில் 5,000 உயர்வருமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், 20,000 பேருக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) பயிற்சி வழங்கவும் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, “ஸ்கிம் சலாம் செஜாஹ்தெரா” (Skim Salam Sejahtera) என்ற நிதியுதவித் திட்டத்தின் கீழ், புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கு மொத்தம் RM400 முதல், அரசுப் பல்கலைக்கழகங்களில் முதல் வகுப்பு (First Class Honours) பட்டம் பெறும் மாணவர்களுக்கு RM5,000 வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, திருமணம் மற்றும் முதியோர் நலனுக்கான உதவித் திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த பொருளாதார இலக்குகளை அடைய அரசியல் நிலைத்தன்மையும் தொடர்ச்சியான நிர்வாகமும் அவசியம் என வலியுறுத்திய டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான், ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் “Tiba Masanya” (நேரம் வந்துவிட்டது) என்ற முழக்கத்துடன் தேசிய முன்னணிக்கு மக்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more