கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள மலேசியாவின் 70 ஆண்டுகாலச் சிறப்பைக் குறிக்கும் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கோலாலம்பூரின் புக்கிட் பிந்தாங் பகுதியில் அலங்கார விளக்குகளை மேம்படுத்த அரசாங்கம் RM2 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
‘I Lite U 2.0’ எனப்படும் இத்திட்டம், புக்கிட் பிந்தாங் பகுதியின் இரவு நேரக் கவர்ச்சியை அதிகரித்து, கோலாலம்பூரை இரவு நேரச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
நகர்ப்புற விளக்கொளி அலங்காரங்கள் நகரின் அழகை மேம்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், சுற்றுலாத் துறையை ஊக்குவித்தல், உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தல், அனைத்துலக அளவில் மலேசியாவின் நற்பெயரை உயர்த்துதல் மற்றும் நகரங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நன்மைகளையும் வழங்குவதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் கோலாலம்பூர் மாநகர மன்றம் மேற்கொள்ளும் மேம்பாட்டுப் பணிகள் அடுத்த மாதம் மத்தியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நுழைவாயில்களில் நிரல்படுத்தக்கூடிய வலை வடிவ விளக்குகள், 20 பகுதிகளில் அலங்கார வீதி விளக்குகள், புதிதாக வடிவமைக்கப்பட்ட 40 அலங்கார மின்கம்பங்கள் மற்றும் 1,000 மின்னும் விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.
மேலும், புக்கிட் பிந்தாங் பாதசாரிகள் நடைபாதையில் ஊடாடும் ஒளிக்காட்சிகளை ஒளிபரப்புவதற்காக 10 உயர் திறன் கொண்ட நீர்ப்புகா புரொஜெக்டர்களும் நிறுவப்படவுள்ளன.
நான்கு முக்கியப் பண்டிகைகளைக் கருப்பொருளாகக் கொண்ட 80 சிறப்பு அலங்கார வடிவங்களும் சுற்றுலா வழிகாட்டிப் பலகைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
‘Ignite the Champion Within You’ (உங்களுக்குள் இருக்கும் வெற்றியாளரைத் தூண்டுங்கள்) என்ற கருப்பொருளில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ங்கா கோர் மிங் தெரிவித்தார். மலேசியர்களிடம் உள்ள திறன்களையும் சிறந்து விளங்குவதற்கான ஆற்றலையும் வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, கலை, விளையாட்டு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் சாதனை படைத்த தேசிய ஆளுமைகளை முன்னுதாரணங்களாக அறிமுகப்படுத்தும் ‘Ikon Gemilang’ நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
இதில் டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, டத்தோ நிக்கோல் டேவிட், எல்லா அமினுடின், சோ வாய் சிங், தானுசியா செட்டி மற்றும் சியா லீக் ஹோ ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இதற்கிடையில், ‘மலேசியாவின் 70 ஆண்டுகாலச் சிறப்பு’ கொண்டாட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு அணிவகுப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி புக்கிட் பிந்தாங் பெவிலியனில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


