லண்டன், நவ. 8 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான வெஸ்ட் ஹேம் யுனைடெட்டின் புதிய நிர்வாகியாக டேவிட் மோயேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். குரோஷியாவின் சிலாவன் பீலிச் நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் டேவிட் மோயேசை புதிய நிர்வாகியாக வெஸ்ட் ஹேம் யுனைடெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் 1 – 4 என்ற கோல்களில் லிவர்புலிடம் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அந்த கிளப் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து தகுதி இறக்கம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் வெஸ்ட் ஹேம் யுனைடெட் நிர்வாகம் , சிலவன் பீலிச்சை நிர்வாகி பொறுப்பில் இருந்து நீக்கியது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் 11 ஆண்டுகள் வெற்றிகரமாக எவெர்டன் கிளப்பை வழி நடத்திய மோயேஸ் அதன் பின்னர் கால்பந்து நிர்வாகத்தில் பல சரிவுகளை சந்தித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டில் மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பை ஏற்ற டேவிட் மோயேஸ், 10 மாதங்களில் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஸ்பெயினின் ரியல் சொசியடாட், இங்கிலாந்தின் சண்டர்லேன்ட் கிளப்புகளிலும் அவர் நிர்வாகி பொறுப்பை வகித்திருக்கிறார்.


