கோலாலம்பூர், நவ.8-
நாட்டில் மக்கள் வெள்ள அபாயத்தை தவிர்க்கும் வகையில் வானிலை நிலவரம் குறித்த அறிவிப்புகளை தொடர்பு பல்லூடக அமைச்சு அதிகரிக்கும் என அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார். இந்த அறிவிப்புகள் அனைத்தும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் ஒத்துழைப்புடன் முக்கிய ஊடகங்கள், சமூக வலைத் தளங்களில் செய்யப்படும்.

இதில் வானிலை முன்பு போல் இல்லாமல் யூகிப்பதற்கே மிகவும் கடினமாக இருப்பதால் இதுகுறித்த அறிவிப்புகள் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. முன்பு உள்ள சூழ்நிலையை எடுத்துக் கொண்டால் வெள்ளம் எந்த மாதத்தில் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும், அதனால் கவலையில்லை; ஆனால் இப்போது அது எந்நேரத்திலும் ஏற்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது என நடாளுமன்றக் கட்டடத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சாலே குறிப்பிட்டார்.