காருக்குள் காதல் ஜோடி சல்லாபம்: போலீசை கண்டதும் ஓட்டம்

ஜோகூர்பாரு, நவ. 8-

காரின் பின்புறம் மெய் மறந்து சல்லாபத்தில் இருந்த காதல் ஜோடி போலீசாரைக் கண்டதும் ஓட முயன்ற வேளையில், ஒரு போலீஸ்காரரை காரினால் மோத முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜோகூர்பாரு திங்கி சாலையின் அருகே சுமார் 10 நிமிடம் அக்காரை விரட்டிய போலீசார் காரை வழிமறித்து காதல் ஜோடியைக் கைது செய்தனர்.

22 வயது காதலரும் 21 வயது காதலியும் விசாரணைக்காக பெலாங்கி இண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜாலான் பாடிக் 20, தாமான் புத்ரி வங்சா, உலு திராமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் பின்புறம் காதல் ஜோடி நிர்வாணமாக இருந்ததை குற்றச்செயல் ஒழிப்பில் இருந்த போலீசார் பார்த்தனர் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது காலில் காதர் முகமது தெரிவித்தார்.

தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட போலீஸ்காரர்கள் கார் கதவைத் திறக்கும்படி அந்தக் காதல் ஜோடிக்கு உத்தரவிட்டனர். ஆனால் காதலன் கார் ஒட்டுநரின் இருக்கையில் அமர்ந்து காரை வேகமாக செலுத்த முயன்ற வேளையில், அங்கிருந்த போலீஸ்காரரை மோத இருந்தார்.

அந்தக் காரை விரட்டிய போலீசார் காரை நிறுத்துங்கள் என்று பலமுறை ஒலிபெருக்கி மூலம் உத்தரவிட்டனர். ஆனால் அந்தக் காதல் ஜோடி காரை நிறுத்தவில்லை. கோத்தா திங்கி நகருக்குள் நுழையும் சாலை அருகே போலீஸ் ரோந்து கார் அந்தக் காதல் ஜோடியின் காரை வழி மறித்தது. போலீஸ் கைது செய்ய முயன்ற போது காதலன் அவர்களின் பிடியிலிருந்து விடுபட போராடியிருக்கின்றான். உலு திராமைச் சேர்ந்த அந்தக் காதல் ஜோடி கல்லூரி மாணவர்கள் ஆவர்.