Homeமலேசியாதுன் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்தானா சிலாங்கூரில் மகஜர்!

துன் மகாதீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்தானா சிலாங்கூரில் மகஜர்!

ஷா ஆலம், நவ. 9-
புகிஸ் வம்சாவளியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரை சாடிய சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிலாங்கூர் மாநில தேசிய முன்னணியின் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று இஸ்தானா புக்கிட் காயாங்கிற்கு சென்று மகஜரை வழங்கினர்.

சிலாங்கூர் தேசிய முன்னணியின் துணைத்தலைவர் டத்தோ மாட் நட்சாரி அஹ்மாட் டாலான் தலைமையில் சென்றிருந்த அவர்கள் அனைவரும் இவ்விவகாரத்தில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தனது உண்மையான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென அவர்கள் வலியறுத்தினர். துன் மகாதீரின் பேச்சுக்கு சிலாங்கூர் சுல்தான் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து சிலாங்கூர் சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளதாக குவாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ஷூக்கூர் இட்ருஸ் கூறினார்.

இந்த மகஜரை சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முஹம்மட் முனிர் பானியிடம் வழங்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சுல்தான் தனக்கு ஆதரவை எதிர்பார்ப்பதாக முனிர் கூறியதாக ஷூக்கூர் குறிப்பிட்டார். ஷூக்கூருடன் இதர சட்டமன்ற உறுப்பினர்களான ஜாக்கிரான் ஜாக்கோமா, டத்தோ ஹாக்கிமாத்தோன் சாடியா போஹான், ஷாரும் ஷாரிப், புடிமான் முஹம்மட் ஜோடி, டத்தோ ரோஸ்னி சோஹார், டத்தோ அமினுடின் செத்ரோ ஆகியோரும் வந்திருந்தனர்.

துன் மகாதீரின் விவகாரம் குறித்து விவாதிக்க கோரும் தீர்மானத்தை மாநில சட்டமன்ற சபாநாயகர் ஹான்னா யியோ நிராகரித்தது குறித்து தேசிய முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். இது குறித்து மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இவ்விவகாரத்தை அம்னோ ஆதரவு ஊடகங்கள் இல்லாமல் நல்ல முறையில் தீர்வு காண முடியும் என கூறினார்.

கடந்த மாதம் 14ஆம் தேதி நம்பிக்கை கூட்டணியின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட துன் மகாதீர், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் புகிஸ் கடற்கொள்ளையர் வம்சாவளியை சேர்ந்தவர் என தமதுரையில் பேசினார். இது புகிஸ் வம்சாவளியை சேர்ந்த சிலாங்கூர் சுல்தானுக்கு ஆத்திரவத்தை வரவழைத்தது. இது குறித்து துன் மகாதீர் மீது நேச நிந்தனையின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more