கோலாலம்பூர், நவ.10 – 

வட மாநிலங்களில் வெள்ளப் பேரிடரால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை அரசியலாக்க வேண்டாம் என துணைப் பிரதமர்  டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கேட்டு கொண்டுள்ளார்.

உயர் மனிதாபிமான அடிப்படையில் அரசியல் வேறுபாடின்றி இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மக்களுக்கான உதவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அதை விடுத்து உதவிகள் தாமதமாக வழங்கப்படுகின்றன என பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவாங் எங் வீர வசனம் பேசுவது ஏற்புடையதல்ல என துணைப் பிரதமர் தெரிவித்தார். வெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர், துணைப் பிரதமர் , அரசாங்கத் துறைகள் என பல்வேறு தரப்பினர் பினாங்கை முற்றுகையிட்டதை மறந்து விட வேண்டாம் என சாஹிட் கூறினார்.

மலைப் பகுதிகளில் கட்டுப்பாடு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களினால் 17 மணி நேரம் பெய்த மழை நீரை ஆறுகளினால் சேமிக்க இயலவில்லை. இந்த பேரிடருக்கு யார் காரணம் என்பதை மாநில அரசாங்கத்துக்கு தெரியும்.

ஆனால் இத்தகைய விவகாரத்தை மத்திய அரசாங்கம் அரசியலாக்கவில்லை என்பதை நினஇவில் கொள்ள வேண்டும் என சாஹிட் ஹமிடி தெரிவித்தார். பினாங்கு மாநிலத்துக்கு தேவையான அனைத்து  உதவிகளையும் மத்திய அரசாங்கம் வழங்கும் என் சாஹிட் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.