Homeமலேசியாபோருக்கு தயாராகுங்கள் ; தளபதிகளுக்கு டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் அறைக்கூவல் !

போருக்கு தயாராகுங்கள் ; தளபதிகளுக்கு டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் அறைக்கூவல் !

கோலாலம்பூர், நவ.11 –

14 ஆவது பொதுத் தேர்தல் நாட்டின் வரலாற்றில் மிக கடுமையான தேர்தலாக அமையவிருப்பதால் ம.இ.கா. இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மேலவை சபாநாயகரும் ம.இ.கா உதவித் தலைவருமாகிய டான் ஶ்ரீ எஸ். ஏ விக்னேஸ்வரன் கேட்டு கொண்டுள்ளார்.

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிச் செய்ய இளைஞர் பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் இப்போதே களப்பணி ஆற்ற தயாராக இருக்க வேண்டும் என விக்னேஸ்வரன் நினைவுறுத்தியுள்ளார். கோலாலம்பூரில் சஹாபாட் மலேசியா அமைப்பின் இரவு விருந்துபசரிப்பில் உரையாற்றியப்போது விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

2000- 2009 ஆம் ஆண்டு முதல் ,ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவராக தாம் பொறுப்பேற்றிருந்தபோது தம்மோடு பணியாற்றிய அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக சஹாபாட் மலேசியா அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா. இளைஞர் பிரிவில் திறம்பட பணியாற்றியவர்களுக்கு மீண்டும் சமூக சேவையில் ஒரு களம் அமைத்துக் கொடுப்பதற்காக சஹாபாட் மலேசியா தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அனுபவமும் சேவையையும் வீண்போகாமல் இருப்பதை உறுதிச் செய்வதுடன் 14 ஆவது பொதுத் தேர்தலில் அவர்களின் உழைப்பும் தேவைப்படும் என விக்னேஸ்வரன் கூறினார்.

எனவே ம.இ.கா. இளைஞர் பிரிவின் முன்னாள் உறுப்பினர்கள் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல், ம.இ.கா மட்டுமின்றி தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்தை வலுப்படுத்த சஹாபாட் மலேசியா கடுமையாக உழைக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். உலகிலேயே தமிழ்நாட்டைத் தவிர இந்தியர்களின் மேம்பாட்டுக்காக சிறப்பு திட்டங்களையும், துறைகளையும் கொண்டுள்ள ஒரே நாடு மலேசியா என்பதை யாரும் மறக்க முடியாது என விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்தியர்களின் நலனில் அக்கறைக் கொண்ட நஜிப்பிற்கு சஹாபாட் மலேசியா அமைப்பு என்றும் உறுதுணையாக இருக்கும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சஹாபாட் மலேசியா விருந்துபசரிப்பில் அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் உசேன், ம.சீ.ச தலைவரும் போக்குவரத்து அமைச்சருமான டத்தோஶ்ரீ லியாவ் தியோங் லாய், கெராக்கான் தலைவரும் , தோட்டத்தொழில் மூலப் பொருள் அமைச்சருமான டத்தோஶ்ரீ மா சியூ கியோங்கும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ம.இ.கா. இளைஞர் பிரிவின் தலைவராக தாம் பதவி வகித்தபோது இம்மூவரும் சொந்த சகோதரர்களைப் போல் தம்முடன் பழகியதாக விக்னேஸ்வரன் கூறினார். இந்த இணைப்பிரியா நட்பு இன்றும் தொடர்வதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார். குறிப்பாக ம.இ.கா. இளைஞர் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து தாம் விலகியப் பின்னர், ஒரு திஷூ பேப்பரில் ஹிஷாமுடின் தமக்கு எழுதிய கடிதத்தை இன்னும் பாதுகாத்து வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இரண்டு நாட்களுக்கு முகாமிட்டிருக்கும் சஹாபாட் உறுப்பினர்களுக்கு 2050 தேசிய உருமாற்றுத் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்படும் என விக்னேஸ்வரன் கூறினார். இதன் வழி சொந்த ஊர்களுக்கு திரும்பும் அவர்கள் தேசிய உருமாற்றம் குறித்து விளக்கங்களை தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் வாக்காளர்களுக்கும் அளிக்க முடியும் என அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more