கோலாலம்பூர், நவ.11-
மீரா எனப்படும் சிறுபான்மையினரின் உரிமை நடவடிக்கைக் கட்சியை நம்பிக்கை கூட்டணியில் ஏற்றுக் கொண்டு அந்தக் கூட்டணியை விரிவு படுத்துவதில் தமக்கு எவ்வித பிரச்னையும் இல்லை என அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீரை நேரில் சந்தித்து, நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கான விண்ணப்பத்தை மீரா கட்சியினர் அவரிடத்தில் சமர்ப்பித்ததாக மீராவின் துணைப் பொதுச் செயலாளர் கே.கார்த்திகேசு தெரிவித்தார்.
இந்தியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்டு, நம்பிக்கை கூட்டணி கட்சி என்னென்ன யுக்திகளை எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது கையாள வேண்டும் என்பது குறித்தான பகுப்பாய்வு அடங்கிய பட்டியலை புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா தலைமைத்துவ அறவாரியத்தில் மகாதீரிடம் மீரா கட்சியினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளை எதிர்க்கட்சிக்கு அளித்தால், 16 முக்கிய நாடாளுமன்ற தொகுதிகளையும், 14 மாநில இடங்களைவெற்றி கொள்ள முடியும் என தங்களின் ஆய்வு தெரியப்படுத்தியுள்ளதாக கார்த்திகேசு குறிப்பிட்டார். நியூஜென் கட்சி என்றழைக்கப்படும் மீரா, ஏ.ராஜரெத்தினம் தலைமையில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தியர்கள் மற்றும் சிறுபான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு கட்சி, நம்பிக்கை கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று தாங்கள் கருதுவதாக கார்த்திகேசு சொன்னார். மீரா இப்போதே இந்தியர்களின் நலனுக்காகப் பாடுபட தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


