புதன்கிழமை, ஜனவரி 22, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தமிழியல் துறையில் 34 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றனர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தமிழியல் துறையில் 34 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றனர்!

பெட்டாலிங் ஜெயா, நவ 11-
மலேசிய தமிழ் இலக்கிய கழகத்தின் முயற்சியில் சுமார் 34 பேர் தமிழியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தை இன்று பெற்றனர். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள தோட்ட மாளிகையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய கழகத்தின் தேசிய தலைவர் அ.இராமன், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய இராமன் கூறுகையில், இந்நாட்டில் தமிழ் இலக்கியத்தை ஆழமாகப் படிப்பதற்கும் தமிழின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கிலும் மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் தமிழியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டக் கல்வியை அறிமுகப்படுத்தி கற்பித்து வருவதாக கூறினார்.

நம் தமிழர்களின் வாழ்வியல் நாகரிகத்தை தமிழ் இலக்கியங்களே உருவாக்கும். முன்பு நம் நாட்டில் பலர் தமிழியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டக் கல்வியை தொடர்வதற்குத் தமிழ்நாட்டிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த அவசியம் இல்லை. அந்தக் குறையை மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் தீர்த்து வைத்திருக்கின்றது. நமது மாணவர்கள் பல்கலைகழகம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அழக்கப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் சொ.சுப்பையாவிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி தேர்வுகளை இந்நாட்டிலேயே நடத்துவதற்கு ஒப்புதல் கிடைத்தது. அந்த வகையில், இன்று 34 மாணவர்கள் பட்டம் பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாக இராமன் கூறினார்.

இதனிடையே, பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் கூறுகையில், மலேசிய தமிழ் இலக்கியக் கழகத்தின் முறையான கல்விமுறையும் நேர்த்தியான பாடத்திட்டங்களும் நேர்மையான கல்வி போதனையுமே மாணவர்கள் தொடர்ந்து பயில்வதற்கான முதன்மை காரணங்களாக விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இன்று பட்டம் பெறுபவர்களில் பெரும்பாலோர் கணவர், மனைவி, பிள்ளைகள் என குடும்ப வாழ்வில் இருப்பவர்கள். அதிகம் கடமை கொண்டவர்களாக இருந்தபோதிலும் தமிழியலில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தியாகங்கள் பல செய்து பட்டம் பெறுகின்றனர். அவர்களை தாம் மனதார பாராட்டுவதாக அவர் தமதுரையில் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன