புரிராம், நவ. 14 –

2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறும் மலேசியாவின் கனவு தாய்லாந்தின் புரிராம்மில் புதைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வட கொரியாவிடம் 1 – 4 என்ற கோல்களில் வீழ்ந்த மலேசியா, திங்கட்கிழமை மீண்டும் அதே கோல் எண்ணிக்கையில் வட கொரியாவிடம் மண்ணை கவ்வியது.

இந்த தோல்வியை அடுத்து ஹரிமாவ் மலாயா எனப்படும் மலேசிய கால்பந்து அணி பி பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தோல்வி, ஹரிமாவ் மலாயா பயிற்றுனர் நெலோ விங்காடாவுக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் ஹரிமாவ் மலாயா அணியின் பயிற்றுனராக பொறுப்பேற்ற நெலோ விங்காடா இதுவரை எந்த ஓர் ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

வட கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நோர் அசாம் அப்துல் அசி, ஷபிக் அஹ்மாட், கைரீல் அனுவார் சம்ரி போன்ற இளம் ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு வழங்கி நெலோ விங்காடா அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார். ஆட்டம் தொடங்கிய 15 நிமிடங்களில் கிம் யூ சொங், வட கொரியாவின் முதல் கோலைப் போட்டார்.

ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் யூ சொங் போட்ட கோலின் மூலம் வட கொரியா தனது இரண்டாவது கோலைப் பெற்றது. முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் யூ சொங் தனது ஹாட்ரீக் கோலைப் போட்டார்.

79 ஆவது நிமிடத்தில் வட கொரியா தனது நான்காவது கோலைப் போட்ட வேளையில் மலேசியாவின் ஒரே கோலை வான் சேக் வான் ஹக்கால் 85 ஆவது நிமிடத்தில் போட்டார்.அடுத்த ஆண்டில் மார்ச் 27 ஆம் தேதி, மலேசியா குழுப் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் லெபனானை சந்திக்கவுள்ளது.