கோலாலம்பூர், நவ.14 –

மலேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயாவின் பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நெலோ விங்காடா உடனடியாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் ஆட்டக்காரர் ஷேபி சிங் வலியுறுத்தியுள்ளார். 2019 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறுவதில் மலேசியா தோல்வி கண்டதை அடுத்து நெலோ விங்காடா பதவியில் இருந்து நீக்க மலேசிய கால்பந்து சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஷேபி சிங் கூறினார்.

வட கொரியாவுக்கு எதிராக ஜோகூர் டாரூல் தாசிம் அணியில் இருந்து ஓர் ஆட்டக்காரரைக் கூட முதன்மை அணியில் களமிறக்காத நெலோ விங்காடாவின் முடிவை ஷேபி சிங் சாடியுள்ளார். வெள்ளிக்கிழமை ஏற்பட்ட படுதோல்விக்கு நெலோ விங்காடா மாற்று வியூகத்தை வகுத்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் தமது வியூகத்தால் , நெலோ விங்காடா ஹரிமாவ் மலாயாவை தலைக்குனிய வைத்துள்ளார்.

கடந்த மே மாதம் பயிற்றுனராக பொறுப்பேற்றது முதல் நெலோ விங்காடா எந்த ஓர் ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை. அவருடைய அடைவுநிலை மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லை.எனவே மலேசிய கால்பந்து விளையாட்டுத்துறையைக் காப்பாற்ற விங்காடா பயிற்றுனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என ஷேபி சிங் கூறினார்.