சிரம்பான், ஜூலை 20-

கெட்கோ நில குடியேற்றத்தில் உள்ளவர்கள் மறியலில் ஈடுபட்டபோது அவர்களில் 13 பெண்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இன்று காலை (20-07-2017)  சிரம்பான் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மூன்று நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்ளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் ஆர்.கெங்காதரன், எஸ். கார்த்திகேசன் மற்றும் எம். சிவராம் ஆகிய மூவரும் சீராய்வு மனுவை நேற்று முன்தினம் சமர்ப்பித்தனர்.  இன்று காலை சிரம்பான் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி டத்தோ சித்தி மரியம், போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்ட 27 பேரையும் உடனடியாகப் போலீஸ் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். 

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கம்போங் செரம்பாங் இண்டா, கெட்கோ எனும் இடத்தில் கெட்கோ நிலத்தை ஏலத்தில் எடுத்த நிறுவனம் ஒரு லோரியில் வெட்டு மரங்களை ஏற்றிச் செல்வதைக் கண்டு 60 க்கும் மேற்பட்டவர்கள் அதனை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டார்கள்.

அப்பொழுது 13 பெண்கள் உட்பட 27 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் விவரம்; முனிரெத்தினம் குப்பன் (வயது 70), செல்வம் எஸ்.ராஜூ (வயது 70), சுப்பிரமணியம் சிம்மாசலம் (வயது 66), ராஜகோபால் ராமசாமி (வயது 66), சகாதேவன் ரெங்கசாமி (வயது 65), கணேசன் செல்லப்பன் (வயது 62), மோகன் பெரியசாமி (வயது 60), அப்பாராவ் கிட்டப்பா (வயது 61), காண்டப்பன் சகாதேவன் (வயது 58), அசோகன் கந்தசாமி (வயது 57), பார்குணன் செல்லப்பன் (வயது 54), ஸ்ரீராமலு கிட்டப்பா (வயது 51), சுப்பிரமணியம் முத்தாலு (வயது 49), காளியப்பன் சந்திரசேகரன் (வயது 36), சுந்தரா பெரியசாமி (வயது 58), தனலெட்சுமி அங்கமுத்து (வயது 57), சரஸ்வதி (வயது 57), மணிமேகலை முனியாண்டி (வயது 55), செல்வராணி கோவிந்தசாமி (வயது 54), சாரதா கோவிந்தசாமி (வயது 54), மீனாட்சி கண்ணப்பன் (வயது 52), திலகவதி பழனியப்பன் (வயது 52), ராதா லெட்சுமணன் (வயது 52), விஜயா கலைவாணன் (வயது 51), சுசிலா பலராமன் (வயது 49), சாந்தி முருகையா (வயது 48) மற்றும் ஜிவா பெருமாள் (வயது 40).