மெட்ரிட், நவ.20 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் வலென்சியா, பார்சிலோனாவுக்கு தொடர்ந்து நெருக்குதலை அளித்து வருகிறது. ஆக கடைசியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வலென்சியா 2 – 0 என்ற கோல்களில் எஸ்பான்யோலை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனாவுடனான புள்ளி வேறுபாட்டை நான்காக வலென்சியா நிலை நிறுத்தியுள்ளது. அதேவேளையில் நடப்பு வெற்றியாளரான ரியல் மெட்ரிட்டுடனான புள்ளி வேறுபாட்டை ஆறாக அதிகரித்துள்ளது.

இந்த பருவத்துக்கான ஸ்பெயின் லீக் போட்டியில் வலென்சியா, தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கிளப்பின் வரலாற்றில் இது ஒரு புதிய சாதனையாகும்.

எஸ்பான்யோல் ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தாலும் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 67 ஆவது நிமிடத்தில் ஜியோபேரி கோன்டோக்பியா, வலென்சியாவின் முதல் கோலைப் போட்டார்.

16 நிமிடங்களுக்குப் பின்னர் மினா, வலென்சியாவின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் வலென்சியா, பார்சிலோனாவை சந்திக்கவுள்ளது.