Homeகலை உலகம்மலேசிய படைப்புகள் தரத்தின் உச்சமா?

மலேசிய படைப்புகள் தரத்தின் உச்சமா?

மலேசிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதும், பின்னர் காட்சிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்படுவதுவும், அதனைத் தொடர்ந்து படத்தை திரையிடுவதை நிறுத்துவதும் தொடர் கதைதான். இந்த கதைக்கு முடிவெழுத இதுவரையில் யாரும் முன்வரவில்லை. அப்படி முன்வருபவர்களையும் நம்மவர்கள் விட்டு வைப்பதில்லை. இது காலம் காலமாக தொடர்ந்து வருகின்றது.

அண்மையில் மலேசிய இளைஞர்களை கவர்ந்த திரைப்படமென கூறப்பட்ட ஜாங்கிரிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. திரையரங்கிலிருந்து திரைப்படத்தை தூக்கிவிடக்கூடாது என இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் அங்கும் இங்கும் அலைந்தார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? தமிழ்நாட்டு திரைப்படங்கள் இங்கு கோடிக் கணக்கில் வசூலை ஈட்டும் வேளையில், உள்ளூர் திரைபடங்கள் ஏன் லட்சத்தை எட்டிப் பிடிக்கவே திணருகின்றன. தரமில்லையா? கதையில்லையா? திரைக்கதை அமைப்பதில் தடுமாற்றமா? இசை, பின்னணி இசை ஈர்க்கவில்லையா? புதுமுகங்கள் காரணமா? நடிப்பாற்றல் இல்லையா? விளம்பரம் போதவில்லையா என பல கேள்விகள் தோன்றி மறைக்கின்றன.

கடந்து வந்த பாதை

மலேசிய கலைஞர்களுக்கு தனியார் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை வழங்க வேண்டுமென்றும் போராட்டத்தை முன்னெடுத்து பின்னர் தடம் மாறி போனார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்தி, உடனே பின்வாங்கியவர்களுக்கு அத்தொலைக்காட்சியில் வாய்ப்புகள் வழங்கப்பட போராட்டம் போன சுவடே தெரியவில்லை.

பின்னர் மலாய் திரைப்படங்களுக்கு வழங்கப்படும்  2 வாரங்கள் திரையிட்டே ஆக வேண்டும் ( WAJIB TAYANG) என்ற சலுகை தமிழ் படங்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார்கள். அந்த கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதோடு மலேசியத் திரைப்பட வாரியத்தில் உள்ளூர் படைப்புகளுக்கு விளம்பரத்திற்கான மானியம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

உடனே தைப்பூசத்திற்கு வெளியிட வேண்டிய படங்கள் கூட திரையரங்கு கதவுகளை தட்டியது. அப்படிப்பட்ட படங்களின் தரம் எப்படி இருக்குமென்பது நான் சொல்லியா உங்களுக்கு தெரிய வேண்டும். திரையரங்குகளில் படங்களுக்கு ஆதரவு இல்லை. அதனால் வருமானம் பாதிப்படைகின்றது என்பதை அறிந்த திரைப்பட உரிமையாளர்கள் குமுற 2 வாரம் 3 நாட்கள் ஆனது. இந்த 3 நாட்களில் வெளியிப்படும் திரைப்படத்திற்கு ஆதரவு இருந்தால், காட்சிகள் அதிகரிக்கப்படும் என முடிவும் எடுக்கப்பட்டது.

ஆனால் கடந்த கால தவறுகளால் இப்போது உள்ள இளம் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது விளம்பரத்திற்காக வழங்கிய மானியங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக கேள்வி. காரணம் இதுவரை வழங்கிய மானியங்களுக்கு எவரும் லாப கணக்கை காட்டவில்லை என பதில் வருகிறது. இது யார் குற்றம்? அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் மலேசிய கலைத் துறை இருக்கின்றது.

அதை விட இதையே எதிர்காலம் என்று நினைக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள்.யாருக்கு அதிகாரம்? திரையரங்கில் வெளியிடப்படும் திரைப்படங்களை யார் முடிவு செய்வது? தரமில்லாத திரைப்படங்களுக்கும் இதில் வாய்ப்பு வழங்கியது யார்? இதனால் இவர்களுக்கு என்ன லாபம்? இப்படி இக்கால இயக்குநர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கிறார்கள். கிடப்பில் கிடக்கும் திரைப்படத்திற்கு கூட விளம்பரத்திற்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அதை கொண்டு உல்லாசமாக பொழுதை கழித்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கூட இங்கு இருக்கிறார்கள். மானியத்தை பெற்றுத் தருபவரை கவனித்துக் கொண்டால் போதும், எப்படிப்பட்ட திரைப்படமென்றாலும் அது திரைக்கு வந்துவிடும். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பதை யோசித்துக்கூட பார்த்ததில்லை. இவை அனைத்தும் தான் இன்றைய மலேசிய கலை உலகம் மங்கிப் போய் கிடப்பதற்கு காரணம்.

நடுநிலையான தணிக்கையாளர் தேவை!

மலேசியத் திரைப்பட வாரியக் குழுவில் இருக்கும் உறுப்பினர் தரமான மலேசிய திரைப்படங்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படிப்பட்டவரைதான் தணிக்கையாளராக நியமிக்கப்பட வேண்டுமென டத்தோ கீதாஞ்சலி வலியுறுத்தினார்.

இந்நிலை தொடர்ந்தால் மட்டுமே மலேசிய கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் வழங்க முடியும். தரமில்லாத திரைப்படங்களையும் தேர்வு செய்வதால்தான் இந்நிலை தொடர்கிறது. திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் யார் என்பதை பார்ப்பதற்கு முன்னதாக, திரையரங்குகளில் வெளியிடக்கூடிய திரைப்படமா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக இப்படிப்பட்ட பிரச்னைகளின் காரணமாகத்தான் ஜாங்கிரி திரைப்படமும் பிரச்னையை எதிர்நோக்கி வந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய திரைப்படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்கிறோம். தரமான படைப்புகள் வரும் பட்சத்தில் அதற்கான ஆதரவும் தேடி வருமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதோடு முகநூலில் ஒரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைப்பது, எந்த அளவிற்கு வெற்றியை கொண்டு வரும் என்பது கேள்விக்குறிதான்.

அந்த எதிர்பார்ப்பு திரையரங்குகளில் பார்க்கும் போதும் புஸ்வானம் ஆகிவிடுவதும் தொடர்ந்து நடக்கின்றது. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கையில் பாதியையாவது, அதனை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விளம்பரத்திற்கு செலவிட வேண்டும். தரமான படைப்புகளை மக்கள் அறியும் வண்ணம் செய்தால் மலேசிய திரைப்படங்களும் தரணி ஆளும்.

–அனேகன் ஆசிரியர் குழு

spot_img

latest articles

explore more