லண்டன், ஜூலை.21

மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் முன்னாள் ஆட்டக்காரர் ஹாவியர் ஹெர்னான்டேஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான வெஸ்ட் ஹேம் யுனைடெட்டில் இணையவுள்ளார். ஹாவியர் ஹெர்னான்டேசை வாங்க, அவர் தற்போது விளையாடி வரும் ஜெர்மனியின் பாயேர்ன் லெவர்கூசன் அணியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக வெஸ்ட் ஹேம் யுனைடெட் அறிவித்துள்ளது.

சிச்சாரித்தோ என அழைக்கப்படும் , 29 வயதுடைய ஹெர்னான்டேஸ் 2010 ஆம் ஆண்டுத் தொடங்கி 2014 ஆம் ஆண்டு வரை மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடினார். அதன் பின்னர் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கிளப்பில் தற்காலிக ஒப்பந்தத்தில் இணைந்த ஹெர்னான்டேஸ் அதன் பின்னர் பாயேர்ன் லெவர்கூசன் அணியில் இணைந்தார்.

ஹெர்னான்டேசை வாங்க வெஸ்ட்ஹேம் யுனைடெட் ஒரு கோடியே 60 லட்சம் பவுன்ட் தொகையை பாயேர்ன் லெவர்கூசனிடம் வழங்கி இருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறுகின்றன. மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடிய 156 ஆட்டங்களில் ஹெர்னான்டேஸ் 59 கோல்களைப் போட்டிருந்தார். ஜெர்மனி பண்டேஸ்லீகாவில் விளையாடிய 76 ஆட்டங்களில் ஹெர்னான்டேஸ் 39 கோல்களைப் போட்டிருக்கிறார்.