கேமரன்மலை, ஜூலை 21-

ம.இ.கா. இளைஞர் பிரிவின் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேமரன் மலைக்கு பயணமாகியுள்ளார். அதோடு அங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதாலும், பொது மக்களை சந்திப்பதாலும், கேமரன் மலையில் தேசிய முன்னணி சார்ப்பில் ம.இ.கா. வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டதால் ம.இ.கா.விற்கு சொந்தமான 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களா? என்றால் அதற்கு உறுதியான பதிலில்லை. ஆனால் இந்த குறுகிய காலத்தின் தொகுதி மக்களின் நம்பிக்கையை பெறுவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில் டத்தோ சிவராஜ் சந்திரனின் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகத் தெரிகின்றது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் 2008ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி 9,164 வாக்குகள் பெற்றார். குறிப்பாக 3117 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

பின்னர் 2013ஆம் ஆண்டு நடந்த 13ஆவது தேசியப் பொதுத் தேர்தலில் ம.இ.கா. முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் இத்தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து டி.ஏ.பி.யின் வழக்கறிஞர் மனோகரன் மாரிமுத்து போட்டியிட்டார். 462 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே டத்தோஸ்ரீ பழனிவேல் தமது வெற்றியை உறுதி செய்தார்.

இம்முறையும் இத்தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ம.இ.கா. மும்முரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் இத்தொகுதியில் போட்டியிட சிவராஜ் சந்திரன் சிறந்த தேர்வாக இருந்தாலும், மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸும் இத்தொகுதியில் பல மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

டத்தோஸ்ரீ பழனிவேல் கட்சியில் இல்லையென்றாலும் இத்தொகுதி இன்னமும் ம.இ.கா. வசமே உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் கேமரன் மலை தொகுதியை விட்டுத் தரப் போவதில்லை என்பதில், ம.இ.கா.வும் உறுதியாக உள்ளது. மார்ச் மாதம் 14ஆவது பொதுத் தேர்தல் நடக்குமென எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.