கோலாலம்பூர், பிப்.12-
தற்போது உள்ள தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் நிர்வாகத்தினால் நாட்டில் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ளதால் வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் மக்கள் நம்பிக்கைக் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள் என அதன் துணைத்தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி நம்பிக்கை கூட்டணி மேற்கொண்டு வந்துள்ள ஆய்விலும் நேரடியாக தாம் களத்தில் இறங்கிய போதும் இந்நிலவரம் தெரிய வருவதாக அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி மக்களின் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்திருப்பதை விரும்பவில்லை. கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் அது மேற்கொண்ட ஆய்வில் மக்கள் வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் ஜிஎஸ்டி ஆகிய பிரச்னைகளை எதிர்நோக்கி இருப்பதைக் காட்டுகின்றது.
பொருட்களுக்கான உதவித் தொகை இப்போது மறுக்கப்பட்டுவிட்டது. திரும்பும் பக்கமெல்லாம் ஜிஎஸ்டி வரிதான் முக்கியப் பிரச்னையாக உள்ளது என டத்தோ கெராமாட் சந்தையில் மக்களுடன் சந்திப்பு நடத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முகைதீன் குறிப்பிட்டார்.
பொருட்களின் விலை உயர்வினால் மக்களுக்கு சுமை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தவறி விட்டது. முன்பு நான் அமைச்சராக இருந்த காலத்தில் பொருள்களின் விலை மக்களுக்குச் சுமையாய் இல்லாதிருப்பதை உறுதி செய்ய இரு வாரத்திற்கு ஒருமுறை நான் சந்தைக்குச் செல்வேன்.
இப்போது நாட்டின் அரசாங்கத்தை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. எனவே, நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரமாக இருப்பதாக முகைதீன் கூறினார்.


