ஷா ஆலம், பிப்.22-
புஞ்சாக் அலாம் மற்றும் சௌஜானா உத்தாமாவில் சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் சேவையின் பாதை மாற்றத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக இந்த சேவையை எம்.ஆர்.டி. சுங்கை பூலோவிற்கு கொண்டு செல்வதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற உறுப்பினர் முஹம்மட் ஃபாகாருடின் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த பாதை மாற்றம் இதற்கு முன்னர் கோரிக்கையை விடுத்து வந்த சுற்றுவட்டார மக்களுக்கு இனிப்பான விஷயமாக கருதப்படுவதாக அவர் கூறினார். இந்த ஸ்மார்ட் பஸ் சேவையை எம்.ஆர்.டி. சுங்கை பூலோவிற்கு கொண்டு செல்வதன் வாயிலாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம்.
மேலும், பரப்பரப்பான நேரங்களில் சௌஜானா உத்தாமாவில் சாலை நெரிசலை இது குறைக்கும் என்றும் நாங்கள் எதிர்ப்பார்ப்பதாக முஹம்மட் ஃபாகாருடின் இஸ்மாயில் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த இலவச பஸ் சேவை இதுவரையில் 4,000 பயணிகளைப் பதிவு செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், இலவச ஃவைபை சேவை முதலானவை பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஊக்குவிக்கின்றது.
மாநில அரசாங்கம் ஏற்படுத்தி தந்துள்ள இந்த சேவையை சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்துவதோடு நீண்ட காலத்திற்கு இச்சேவை நன்மையை அளிக்கும் வகையில் அதனைப் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் நினைவுறுத்தினார்.


