கோலாலம்பூர், மே 14-
பெல்டாவின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாகவும் இந்த விலகல் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சாமாட் தெரிவித்தார்.
தனது விலகல் கடிதத்தை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அனுப்பியுள்ளதாகவும் தனது அறிக்கையின் வாயிலாக அவர் கூறினார்.
ஷாரிரின் பதவி விலகலை முன்னிட்டு தலைநகரிலுள்ள பெல்டா தலைமையகத்தில் பிரியாவிடை விருந்து அவருக்கு வழங்கப்பட்டதாக டெ ஸ்டார் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஷாரிருக்கு பதில் அப்பதவியில் அமரவிருப்பவர் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பிரச்னையாக இருந்த பெல்டாவில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு 16 மாதங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் ஷாரிர் பெல்டா தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆயினும், கடந்த வாரம் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் ஷாரிர் சாமாட் பி.கே.ஆரின் வேட்பாளர் அக்மால் நஸ்ருல்லா நசிரிடம் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.


