கோலாலம்பூர், பிப் 26-
நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில் 60 நாட்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் அசஹார் அஸிசான் ஹருண் தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவதிகாரியின் ஒப்புதல் கடிதத்தை தேர்தல் ஆணையம் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். 1954ஆம் ஆண்டின் தேர்தல் சட்டத்தின் கீழ் ரந்தாவ் சட்டமன்றத்தின் தேர்தல் முடிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து 60 நாட்களுக்குள் ரந்தாவ் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதையும் அசஹார் வழியுறுத்தினார்.
ரந்தாவ் தொகுதி காலியாகி இருப்பது குறித்து நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்.

ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு நாள் குறித்து விரைவில் தேர்தல் ஆணைக்குழு நடத்தவிருக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி அட்டை இல்லாததால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்திற்கு பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் அனுமதிக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்து ரந்தாவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.
இந்த முடிவை எதிர்த்து டாக்டர் ஸ்ரீராம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் முடிவு செய்தது.


