புத்ரா ஜெயா, பிப். 27-
இதற்கு முன்பு லிட்டர் ஒன்றுக்கு 2 வெள்ளி 20 காசாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரோன் 95 பெட்ரோலின் கூடியபட்ச சில்லறை விலை தற்போது 2 வெள்ளி 8காசாகக் குறைக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களின் உண்மையான சந்தை விலையைக் கருத்தில் கொண்டு இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக குவான் எங் கூறினார்.
“உலக எண்ணெய் விலை ஏற்றம் கண்டபோதிலும் ரோன் 95 பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 2 வெள்ளி 8காசாகவே நிர்ணயிக்கப்படும்” என்றார் அமைச்சர்.
” அப்படியே உலக எண்ணெய் விலை இதைவிட குறைந்தாலும் கூட ரோன் 95 பெட்ரோலின் வாராந்திர விலை 2வெள்ளி 8 காசுக்குக் குறைவாகவே இருக்கும்” என்று அறிக்கை ஒன்றின் வழி குவான் எங் விவரித்தார்.
தானியங்கி விலை முறை(ஏபிஎம்) கணக்கீட்டின் கீழ் ரோன் 95, ரோன் 97 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை வாராந்திர அடிப்படையில் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.
ரோன் 95 பெட்ரோல் சில்லறை விலை குறைக்கப்பட்டிருப்பது மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


