கோலாலம்பூர். மார்ச் 3-
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சமரசவாதி செயல்பட வேண்டும். அனைத்துலக ரீதியில் தமக்கு இருந்துவரும் பரவலான அனுபவத்தைப் பயன்படுத்தி டாக்டர் மகாதீர் அந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை அல்லது பதற்றத்தை தீர்க்க முடியும் என பாஸ் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக டாக்டர் மகாதீர் பதவி ஏற்ற பின்னர் அவரை சந்திப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்கு வந்தார். இது அவ்விரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு மலேசிய இந்திய நட்புறவில் நல்லதொரு புரிந்துணர்வை .ஏற்படுத்தியிருக்கிறது என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களும் கடந்த நவம்பர் மாதம் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளார். எனவே இவ்விரு தலைவர்களுக்கிடையே டாக்டர் மகாதீருக்கு அணுக்கமான புரிந்துணர்வும் நட்புறவும் இருப்பதால் இந்தியா-பாகிஸ்தான் நெருக்கடியை தீர்ப்பதற்கு அவர் சிறந்த சமரச வாதியாக செயல்பட முடியும் என பாஸ் கட்சி நேற்று வலியுறுத்தியது.
இந்திய துணை கண்டத்தில் அமைதி ஏற்பட வேண்டும். குறிப்பாக காஷ்மீர் விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையே நெருக்கடியை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் துவான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.


