பெண்களைப் போற்றவே, ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்பட பல துறைகளில் பெண்கள் தற்போது மேம்பாடு கண்டு வருவதைக் காண முடிகிறது.
மேற்கோளாக, நாட்டின் முதலாவது துணைப் பிரதமராக டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் சாசனத்தில் பெண்களுக்குத் தனியொரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
இதைத் தவிர்த்து, விளையாட்டுத் துறையிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஸ்குவாஷ் போட்டியில் டத்தோ நிக்கோல் டேவிட் சாதனை படைத்து வருகிறார்.
இவ்வேளையில். சிறுமியான அபிராமி பனிச் சறுக்கு விளையாட்டில் தனது அபார திறமைகள் வாயிலாக உலக அரங்கில் மலேசியாவின் நற்பெயரை நிலைநாட்டி வருகிறார்.
பெண்களால் மலேசியா மாண்பு பெற்று வருகிறது என்பதற்கு இவர்கள் சான்றாக அமைகின்றனர். இவர்களைப் போலவே மருத்துவம், கல்வி , ஆராய்ச்சி போன்ற துறைகளிலும் பெண்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தி மக்களின் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளனர்.
பெண்ணியம் போற்றும் அனைத்து இதயங்களுக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள்


