புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > வானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா? – இந்து ஆகம அணி போலிஸ் புகார்
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

வானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா? – இந்து ஆகம அணி போலிஸ் புகார்

கோலாலம்பூர், மார்ச் 8-
வானொலி அலைவரிசை ஒன்றில் தான் வழங்கவிருந்த சிறப்பு பேட்டியை  சில தரப்பினர் கீழிருப்பு வேலை செய்து தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அதனைக் கண்டித்து தான் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளதாகவும் இந்து ஆகம அணியின் ஒருங்கிணைப்பாளர் அருண்துரைசாமி தெரிவித்துள்ளார்.

இவ்வார துவக்கத்தில் பத்துமலை தேவஸ்தான நிர்வாகத்தின் உயர் பதவிகளை கொண்டவர்களின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி சோதனை மேற்கொண்டு சுமார் ஒரு மில்லியன் வெள்ளி ரொக்கமும் நகைகளும் விலை உயர்ந்த பொருட்களையும் கைப்பற்றியது. இவ்விவகாரம் தொடர்பில் மூவரை விசாரணைக்காகவும் ஆணையம் தடுப்பு காவலில் வைத்தது.

இதில் சம்பந்தப்பட்ட நபர் புதிதாக கட்டியுள்ள வீடு குறித்தும் மலேசிய ஆகம அணி அண்மையில் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நபர்கள் உட்பட தேவஸ்தானத்தை சார்ந்த உறுப்பினர்களில் சிலரையும் பொறுப்புகளிலிருந்து நீக்கி புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம்.

அதே வேளையில் பொது நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் அவ்வீட்டிற்கு “சீல்” வைத்து பொது நிலைத்தில் எழுப்பப்பட்டுள்ள பகுதிகளை உடைக்க வேண்டும் என்றும் தாங்கள் மாநில மந்திரி பெசார், டத்தோ பண்டார் ஆகியோரிடமும் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் போதிய ஆதார ஆவணங்களை திரட்டிய பின்னரே நாங்கள் செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தினோம்.

இந்நிலையில் பத்துமலை விவகாரம்-இந்திரா காந்தி விவகாரம் உட்பட பல சமூக – சமய சார்ந்த விவகாரங்கள் தொடர்பில்  தான் பேச தனியார் வானொலி அலைவரிசையில் பேட்டி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இப்பேட்டி இடம் பெற கூடாது என்பதற்காக ஒரு சில தரப்பினர் கீழிறுப்பு வேலை செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

குறிப்பாக அந்த வானொலினலை வரிசைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப்பேட்டி நடைபெற கூடாது என மிரட்டியுள்ளனர். நேற்று மாலைந்தொடங்கி அத்தரப்பினர் வானொலி அலைவரிசையின் தலைமை செயல்முறை அதிகாரி வரை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். இதனால் இப்பேட்டி இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது என அருண் துரைசாமி விவரித்தார்.

மிரட்டல் விடுத்து பேட்டியை ரத்து செய்ய வைக்கும் அத்தரப்பினரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகையால் இவ்விவகாரம் தொடர்பில் இந்து ஆகம அணியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுப் பிடித்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன