மென்செஸ்டர், மார்ச்.16-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் வெற்றியாளரான மென்செஸ்டர் சிட்டி, ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணம் ( சாம்பியன்ஸ் லீக் ) வெல்ல வேண்டும். இல்லையேல் தாம் ஒரு தோல்வி அடைந்த நிர்வாகி என முத்திரைக் குத்தப்படலாம் என பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
பார்சிலோனா நிர்வாகியாக இருந்தபோது பெப் குவார்டியோலா இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்றிருக்கிறார். எனினும் ஜெர்மனியின் பாயேர்ன் மூனிக்கை நிர்வகித்த மூன்று ஆண்டுகளில் பண்டேஸ்லீகா பட்டங்களை வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்வதில் குவார்டியோலா தோல்வி கண்டிருந்தார்.
இதனால் தோல்வி அடைந்த நிர்வாகி என தாம் முத்திரைக் குத்தப்பட்டதாக குவார்டியோலா தெரிவித்தார். தற்போது மென்செஸ்டர் சிட்டியிலும் தமக்கு அதே நிலை ஏற்படலாம் என குவார்டியோலா கூறினார். குறிப்பாக மென்செஸ்டர் சிட்டி கடந்த இரண்டு பருவங்களில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்வதில் தோல்வி கண்டுள்ளது.
கடந்த பருவத்தில் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறிய மென்செஸ்டர் சிட்டி லிவர்புலிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பருக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி வெற்றி பெற வேண்டும் என குவார்டியோலா கூறினார்.


