கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-
நாட்டின் கொள்கைகள் தொடர்பில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டுடன் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்க முடியாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் டத்தோ தக்கியூடின் ஹசான் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 43 உட்பிரிவு 2 (b)-யின் கீழ், பிரதமரின் ஆலோசனையின்படி, மாட்சிமை தங்கிய மாமன்னர் அமைச்சர்களின் நியமனத்தை அங்கீகரிக்கிறார்.
எனவே, அரசாங்க கொள்கைகள் தொடர்பில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டப் பின்னரும் , அமைச்சர்கள், பிரதமருடன் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பது ஏற்புடையதல்ல என தக்கியூடின் தெரிவித்துள்ளார். இது கடமையை மீறுவதற்கு சமமாகும் என தக்கியூடின் கூறினார். இத்தகைய செயல் நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 43 பிரிவு, உட்பிரிவு 5-ன் கீழ், பிரதமரின் உத்தரவை மீறும் அமைச்சர்களின் நியமனத்தை ரத்து செய்வதற்கு டாக்டர் மகாதீர், மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு ஆலோசனை வழங்கலாம் என்றும் தக்கியூடின் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாத இறுதியில் புத்ராஜெயாவில் மகாதீருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தக்கியூடினும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


