ஹரிமாவ் மலாயா ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் இணையத்தின் மூலம் விற்பனை !

0
13

கோலாலம்பூர், ஆகஸ்ட்.16-

தேசிய கால்பந்து அணி, ஹரிமாவ் மலாயா பங்கேற்கும் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் இனி இணையம் மூலமாக விற்கப்படும் என மலேசிய கால்பந்து சங்கமும், மலேசிய அரங்க வாரியமும் அறிவித்துள்ளன. மலேசிய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இணையம் மூலம் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விற்பனையில், எழும் பிரச்சினைகளைக் களைவதற்கும், அதன் தொடர்பில் ரசிகர்களிடையே ஏற்படும் ஆதங்கத்தைப் போக்குவதற்கும், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மலேசிய அரங்க வாரியத்தின் தலைவர் டான் ஶ்ரீ டோனி பெர்னான்டேஸ் தெரிவித்துள்ளார். இந்த டிக்கெட் விற்பனையை வழி நடத்தவிருக்கும் நிறுவனம் இன்னும் தேர்தெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும் அந்த நிறுவனத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக டோனி பெர்னான்டேஸ் கூறினார். வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 2022 உலகக் கிண்ணம் / 2023 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை இணையம் மூலம் விற்பதற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இந்த ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா, ஐக்கிய அரபு சிற்றரசை எதிர்கொள்ளவிருக்கிறது.