Homeஅரசியல்லினாஸ் விவகாரத்தில் வாக்குறுதி தவறியது ஏன்? -கெராக்கான் கேள்வி

லினாஸ் விவகாரத்தில் வாக்குறுதி தவறியது ஏன்? -கெராக்கான் கேள்வி

கோலாலம்பூர், ஆக. 17-

அரிய மண் தயாரிப்பு நிறுவனமான லினாஸ் மலேசியாவின் உரிமத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதுப்பித்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நடவடிக்கையை கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சாடினார்.

இந்நடவடிக்கையானது பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையை  மீறியுள்ளதோடு அரசாங்கத்தின் வாக்குறுதிகள் யாவும் வெற்று வாக்குறுதிகள் என்பதையும்  காட்டுகிறது என்றார் அவர்.

அணு சக்தி உரிம வாரியம் அரிய மண் தயாரிப்பு நிறுவனமான லினாஸின் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தது. அதில் இரண்டாவது நிபந்தனையானது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அரிய மண் கழிவுப் பொருட்களால்  மின் கதிர் பாதிப்பு ஏற்படும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

லினாஸ் தனது ஆலையின் கழிவுப் பொருட்களை  நிரந்தரமாக வெளியேற்றும் இடத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அக்கழிவு பொருட்களை  நாட்டை விட்டு அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் பகுதி   மாநில அரசாங்கத்தின்  அனுமதியைப் பெற்றிருக்க   வேண்டும் என்றும் அந்த நிபந்தனை வலியுறுத்துகிறது.

அதேவேளையில், அந்தக் கழிவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளும் சம்பந்தப்பட்ட ய்ய நாட்டின் அதிகாரப்பூர்வ அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாடு இவ்வகை  கழிவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறது என்று  அறிக்கை ஒன்றின் வழி டோமினிக் லாவ்  வினவினார்.

இந்த நிபந்தனைகள் யாவும் இந்த விவகாரத்தை இழுத்தடிப்பதற்காகவே  விதிக்கப்படுவதாகத்  தெரிகிறது. மேலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லினாஸ் மலேசியாவில்  அரிய மண் தயாரிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடப்  போவது திண்ணம்  என்றார் அவர்.

“லினாஸ் விவகாரத்தை மட்டுமே  பேசி  மக்களின் ஆதரவைப் பெற்ற பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தெக் வெட்கித் தலை குனிய வேண்டிய தருணம் இது”.

“14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தைக் கைப்பற்றியவுடன் லினாஸ் மூடப்படும் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தது யார்? பக்காத்தான் அரசாங்கம் லினாஸை மூடாவிட்டால், அந்தத் தொழிற்சாலையைத் தீயிட்டுக் கொளுத்தப் போவதாக முழங்கிய  அந்த வாய்ச்சொல் வீரர் யார்? அவர்தான் வோங் தெக் என்று டோமினிக் லாவ்  சுட்டிக் காட்டினார்.

ஜசெக தற்போது அரசாங்கத்தில்தான் இருக்கிறது என்பதை வோங் தெக்கிற்கு டோமினிக் லாவ் நினைவுறுத்தினார். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய கொள்கைகளை அரசாங்கம் இயற்றுவதற்கு ஜசெக தனது செல்வாக்கைப்  பயன்படுத்த வேண்டும். மாறாக, ஓர் எதிர்க்கட்சி போல்  செயல்படக் கூடாது என்றார் அவர்.

அரபு ஓவிய எழுத்து மற்றும் லினாஸ் ஆகிய இரு விவகாரங்களிலும்  தனது  முடிவை மாற்றிக் கொள்ளும்படி அரசாங்கத்தை  வலியுறுத்த ஜசெக தவறிவிட்டது.   பக்காத்தான் அரசாங்கத்தில் ஜசெகவிற்கு அதிகாரம் இல்லை என்பதை இது  தெளிவாகக் காட்டுகிறது.

லினாஸ் தொழிற்சாலையை வோங் தெக் உண்மையாகவே எதிர்த்தால் , அவர் தனது நாடாளுமன்ற பதவியைத் துறப்பதோடு ஜசெகவில் இருந்தும் விலக வேண்டும். ஏனெனில் லினாஸை ஜசெக மூடும் என்று இவர் திட்டவட்டமாக நம்பினார். நம்பகத்தன்மையை இழந்துவிட்ட வோங் தெக் ஜசெகவில் தொடர்ந்து நீடிப்பதில்  எந்தவொரு அர்த்தமும்  இல்லை என்றார்  டோமினிக் லாவ்.

spot_img

latest articles

explore more