பினாங்கு, ஆக 19-
அகச்சக்கர மன்றத்தின் புதியத் தலைவராக, பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர் டத்தோ டாக்டர் அலோய்சியஸ் ராஜ் அவர்களின் துணைவியார் டத்தின் ஜெசிந்தா அலோய்சியஸ் நியமனம் பெற்றார்.
பினாங்கு மாநிலத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சளைக்காமல் சேவையாற்றி வருவதால் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டது.
அனைத்துலக ரீதியில் பெண்கள் நலன் பேணும் இயக்கமாக மட்டுமின்றி, பல்வேறு சமூகப் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, துடிப்புடன் செயல்படுவதில் தங்கள் ஆற்றலை நன்றே புலப்படுத்தி வந்தவர் அகச் சக்கர மன்றத்தின் முன்னாள் தலைவி மருத்துவர் ஆர்.ஜெயலட்சுமி. அவர் தனது பதவியை டத்தின் ஜெசிந்தாவிடம் தமது பணியை ஒப்படைத்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு பற்பல நடவடிக்கைகளால் விவேகமாக செயல்பட்டு வருகின்றனர் அகச்சக்கர மன்றத்தினர். அனைத்துலக ரீதியாகவும் தங்களின் சமூகப் பணிகளால் புகழ் பெற்று விளங்குவதாகவும், மன்றத்தின் சேவை மிக்க கொள்கைகளால், தங்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தி வரும் திறனும் பாரட்டுக்குரியது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மன்றத்தின் 11வது தலைவராக நியமனம் கண்டிருக்கும் டத்தின் ஜெசிந்தா தொடக்கத்தில் தேவாலயப் பணிகளில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சமூகத் தொண்டாற்றி வந்தார். அதே வேளையில், பாட்டுக் கலையிலும் ஆர்வம் காட்டி வந்ததாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில் அகச்சக்கர மன்றம் மீதான ஈடுபாடு தம்மை பெரிதும் ஈர்த்து விட்ட பட்சத்தில் சேவை மனப்பான்மையுடன் அப்பயணத்தில் தடம் பதித்து விட்டதாக அகம் நெகிழ்ந்தார்.
“ஒன்றுபட்டால் நம்மால் முடியும்” என்ற கருப்பொருளை மூலதனமாகக் கொண்டு அகச்சக்கர மன்றம் செம்மையாக செயல்பட்டு வருகிறது. அதனை திறம்பட வழி நடத்தி, ஓர் உன்னதமிக்க இயக்கமாக நிலைநிறுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் என்று ஜெசிந்தா தெரிவித்தார்.


