கோலாலம்பூர் | மார்ச் 12
எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கும் சட்டத்தை தேசியக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என நம்பிக்கைக் கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவர் ஷஸ்னி முனிர் முகம்மட் இத்னின் வலியுறுத்தியுள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட இடமிருக்கும்போது அதே 18 வயது நிரம்பியவர் ஏன் வாக்களிக்க மறுக்கப்படுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் வாக்களிக்கக் குறைந்தபட்ச வயது 21இல் இருந்து 18 ஆகக் குறைக்கப்படுவதற்கு முழு ஆதரவு கிடைத்தது.
மேலும், 18 வயதை எட்டும் ஒருவர் இயல்பாகவே வாக்களிக்கத் தகுதி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சட்டம் குறித்த அறிவிப்பு அதே ஆண்டு செப்தெம்பர் 10ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 3 ஆம் நாள் பிரதமர் துறை அமைச்சர் தக்கியூடின் ஹசான் தெரிவிக்கையில், 18 வயது வாக்காளர் பதிவு இவ்வாண்டு ஜூலை மாதத்தில் நடப்புக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார்.
அந்தச் சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வர இப்போதுள்ள அரசாங்கத்திடம் எந்தக் காரணமும் இல்லை. எனவே, அதனைத் தாமதப்படுத்தாது உடனடியாக நடப்புக்குக் கொண்டு வர வேண்டும்.
ஆனால், இன்னுமும் அரசாங்கம் இவ்விவகாரத்தில் தாமதிப்பது ஏன் எனத் தமக்குப் புரியவில்லை என ஷாஸ்னி குறிப்பிட்டார்.
வெறுமெனவே காலம் தாழ்த்தப்படுகிறதா ? அல்லது 18 வயதுடையவர்கள் தங்களை (நடப்பு அரசாங்கத்தை) ஆதரிக்கமாட்டார்களா ? எனத் தாம் அறியவில்லை எனக் குறிப்பிட்டவர், அவர்கள் சுயநலமாக இருக்கக் கூடாது என ஷாஸ்னி சுட்டிக் காட்டினார்.


