Homeஅரசியல்சுமூகமாக பிரதமர் மகியாதீன் பதவி விலக வேண்டும் ! – அம்னோ

சுமூகமாக பிரதமர் மகியாதீன் பதவி விலக வேண்டும் ! – அம்னோ

கோலாலம்பூர் | 8/7/2021 :-

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்டது மட்டும் இல்லாமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என நேற்றிரவு அம்னோ முடிவு செய்துள்ளது.

இது குறித்து அம்னோ கட்சியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவிக்கயில், தேசியக் கூட்டணி அரசாங்கம் 7 முக்கியக் கூறுகளில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் உச்சமன்றம் இம்முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே, புதிய பிரதமர் நியமிக்கப்பட மிக சுமூகமான முறையில் பிதரமர் மகியாதீன் முகம்மது யாசின் பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இடைப்பட்டக் காலத்தில் நியமிக்கப்படும் பிரதமர் மக்களின் சமூக நலன்களை மட்டுமே கவனிப்பவராக இருப்பார். மேலும், கோவிட்-19 பெருந்தொற்று எதிராகப் பெரும்பான்மை மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரையில் அவர் பதவியில் இருப்பார் என அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

அதனை அடுத்து இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டவர் 15வது பொதுத் தேர்தலை நடத்த மாமன்னருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

மாமன்னரின் எண்ணம் போல் ஓர் அரசாங்கம் மக்களின் பெரும்பான்மை ஆதரவோடும் நிலையாக இருந்து செயல்படுவதற்கும் பொதுத் தேர்தல் மிக முக்கியம்.

பிரதமர் மகியாதின் முகம்மது யாசினின் தேசியக் கூட்டணி அரசாங்கம் கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வது, ஊரடங்கை தவறாகப் பயன்படுத்தல், நாடாளுமன்ற மக்களாட்சி அமைப்பைத் தற்காத்தல், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை நிர்வகித்தல், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்தல், மாமன்னரின் கட்டளையைப் பின்பற்றுதல் ஆகிய விவகாரங்களில் தோல்வி அடைந்துள்ளது.

அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் நாட்டின் துணைப் பிரதமராகவும் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன்  ஹுசேனை வெளியுறவு அமைச்சராக அறிவித்த அடுத்த 12 மணி நேரத்திற்குள் அம்னோ இம்முடிவை எடுத்துள்ளது.

அன்வார் பிரதமர் வேட்பாளர் கிடையாது !

அதே வேளையில், டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிமைப் பிரதமர் வேட்பாளராகக் குறிப்பிட்டு அம்னோ ஆதரிக்காது. மேலும், ஜ.செ.க.வுடன் இணைந்த ஆட்சியையும் அது ஆதரிக்காது எனும் முடிவை அம்னோ உச்சமன்றம் எடுத்துள்ளதாக அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

முன்னதாக, அம்னோ பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அம்முடிவை அவர் மேலும் வலியுறுத்தி கூறினார்.

அம்னோவின் கடந்த பொதுக் கூட்டத்தின்போது, தேசியக் கூட்டணிக்கு வழங்கி வந்த ஆதரவை எப்போது மீட்டுக் கொள்ளப்படும் எனும் முடிவை எடுக்க அதன் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்டது.

தேசியக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொள்ளப்படும் போது அம்னோவின் அமைச்சர்கள் தங்களின் பதவியைத் துறப்பார்கள் என அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருந்தார்,

ஆனால், நேற்று இரவு தேசியக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்த அம்னோ, டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உட்பட அம்னோ அமைச்சர்கள் பதவி விலகலைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை நாட்டின் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட விவகாரம் பிரதமர் மகியாதின் முகம்மது யாசினின் அம்னோவை சமாதானப் படுத்தி தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தும் முயற்சியாக நம்பப்படுகிறது.

அம்னோ உச்சமன்றம் நேற்று இரவு எடுத்த முடிவுக்கு அதன் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களீன் ஆதரவு என்ன நிலையில் உள்ளது என்பது இன்னும் அறியப்ப்படவில்லை. அதில் பெரும்பான்மையினர் இஸ்மாயில் சப்ரிக்கும் ஹிஷாமுடினுக்கும் ஆதரவாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது.

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்ப்பினர் நஸ்ரி அஸிஸ் பிரதமர் மகியாதின் முகம்மது யாசினுக்கு வழங்கிய ஆதரவைத் தொடர்ந்து, இன்னும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணிக்கு வழங்கும் ஆதரவை மீட்டுக் கொண்டால், நாடாளுமன்றத்தின் நிலை தொக்கி நிற்கும்.

அதே நேரத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணி வழங்கும் ஆதரவை மீட்டுக் கொண்டால், பிரதமர் மகியாதின் முகம்மது யாசினுக்கு சிறுபான்மை ஆதரவே மிஞ்சும்.

நேற்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கிய ஆம்னோவின் உச்சமன்றக் கூட்டம் நள்ளிரவு 12..30 மணி அளவில் நீடித்தது.

spot_img

latest articles

explore more