சுங்கை பெட்டானி | 8/7/2021 :-
இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையின் சில மருத்துவர்கள், தாதியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ளதாக அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகம்மட் ஹயாத்தி ஓத்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு டெல்தா, பேத்தா வகை உருமாறியத் தொற்று பரவியுள்ளதாக நம்பப்படுவதாக சுகாதாரம், ஊராட்சித் துறை செயற்குழுவின் தலைவருமான அவர் கூறினார்.
இந்தியாவில் இருந்து கண்டறியப்பட்ட டெல்தா வகை (B.1.617), தென்னாப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட பேத்தா வகை (B.1.351) ஆகிய இரு வகைத் தொற்று எளிதாகவும் விரைவாகவும் பரவும் ஆற்றல் கொண்டுள்ளது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள அம்மருத்துவமனையின் சில பிரிவுகள் தொற்று நீக்கும் தூய்மைப் பணிக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மற்றப் பிரிவுகள் வழக்கம் போல் செயல்படும்.
தொடர் சிகிச்சைக்காக அழைப்பு நாள் கொடுக்கப்பட்டுள்ள நோயாளிகள் தங்களின் நேர்முகச் சந்திப்புக்குப் புதிய தேதி வழங்கப்படும் என ஹயாத்தி கூறினார்.
இவ்விவகாரம் குறித்து சுற்றுவட்டார மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் மாநில சுகாதாரத் திணைக்களமும் மாவட்ட சுகாதார அலுவலகமும் வேண்டிய நடவடிக்கையை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசியப் பாதுகாப்பு மன்றமும் சுகாதார அமைச்சும் முடிவு செய்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அந்த மருத்துவமனைப் பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதாகப் பரவி வந்தத் தகவலை அவர் மறுத்துள்ளார்.


